FASTag உடன் நம்பர் பிளேட் இணைப்பு: ரூ.10,000 கோடி கூடுதல் வருவாய் பெற மத்திய அரசு திட்டம்
செய்தி முன்னோட்டம்
மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலகளாவிய ஃபின்காப்பரேட் விழாவில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவில் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையில் ஃபாஸ்டேக் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து, டோல்கேட்களில் வாகனம் நிற்காமல் செல்லக்கூடிய தடைகளற்ற சுங்க வசூல் அமைப்பை கொண்டுவர அரசு ஆயத்தமாகி வருவதாக அவர் அறிவித்துள்ளார். அதாவது, ஃபாஸ்டேக் அமைப்போடு வாகனங்களின் நம்பர் பிளேட்களைக் கண்டறியும் அதிநவீன தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்படும். இதன் மூலம் டோல்கேட்களில் உள்ள பேரியர்கள் அகற்றப்பட்டு, வாகனங்கள் நிற்காமல் தடையின்றி செல்ல முடியும்.
சிறப்பம்சங்கள்
புதிய சுங்கக் கட்டண முறையின் முக்கிய சிறப்பம்சங்கள்
ஃபாஸ்டேக் மற்றும் நம்பர் பிளேட் முறையை இணைப்பதன் மூலம் கட்டணம் தப்பாமல் வசூலிக்கப்பட்டு, சுங்கக் கட்டண வருவாயில் ஆண்டுக்கு ₹10,000 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என நிதின் கட்கரி தெரிவித்தார்.
இத்தொழில்நுட்பம் மூலம் சுங்கச்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களையும் துல்லியமாகக் கண்காணிக்கவும் அடையாளம் காணவும் முடியும்.
2016-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, 2021-ஆம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்ட ரேடியோ-ஃபிரிகோன்சி (RFID) அடிப்படையிலான ஃபாஸ்டேக் முறை, ரொக்கப் பரிவர்த்தனைகளைக் குறைத்து சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரத்தைப் பெருமளவு குறைத்துள்ளது.
தற்போது அறிமுகமாகவுள்ள இந்த புதிய தொழில்நுடப்பத் தழுவல், நாட்டின் நெடுஞ்சாலைப் போக்குவரத்தை மேலும் விரைவானதாகவும் தடையற்றதாகவும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.