புதிய சிட்ரன் C3 ஏர்கிராஸ்.. எப்போது வெளியீடு?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் தங்களுடைய புதிய கார் மாடலான C3 ஏர்கிராஸ் மிட்-சைஸ் எஸ்யூவியை அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் வெளியிடவிருக்கிறது சிட்ரன். இந்த புதிய மாடலை எப்போது அந்நிறுவனம் இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
5 மற்றும் 7 சீட் ஆப்ஷன்களுடன், 10.2 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் மற்றும் 7-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகிய வசதிகளைப் பெற்றிருக்கிறது C3 ஏர்கிராஸ்.
200மிமீ கிரௌண்டு கிளியரன்ஸைக் கொண்டிருக்கும் C3 ஏர்கிராஸின் எந்த வேரியன்டிலும் சன் ரூஃப் ஆப்ஷனை சிட்ரன் கொடுக்கவில்லை.
ஹோண்டா எலிவேட், ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வாகன் டைகூன் ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக இந்த புதிய C3 ஏர்கிராஸை வெளியிடவிருக்கிறது சிட்ரன்.
சிட்ரன்
சிட்ரன் C3 ஏர்கிராஸ்: இன்ஜின் மற்றும் வெளியீடு
புதிய C3 ஏர்கிராஸில், 110hp பவர் மற்றும் 190Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கிறது சிட்ரன். இந்த இன்ஜினையே C3 டர்போ ஹேட்ச்பேக் மாடலிலும் அந்நிறுவனம் பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடலை மட்டுமே அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவிருக்கிறது. பின்னாளில் இதன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலை அந்நிறுவனம் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
மேற்கூறிய மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடலானது லிட்டருக்கு 18.5 கிமீ மைலேஜைக் கொடுக்கும் எனத் தெரிவித்திருக்கிறது சிட்ரன் நிறுவனம்.
இந்த C3 ஏர்கிராஸின் முன்பதிவை செப்டம்பரில் தொடங்கி, விலை அறிவிப்பு மற்றும் டெலிவரியை அக்டோபரில் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது சிட்ரன்.