BYD-யின் 1 பில்லியன் டாலர் முதலீட்டை நிராகரித்தது மத்திய அரசு
சீனாவைச் சேர்ந்த BYD மோட்டார் நிறுவனம் இந்தியாவில் 1 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் புதிய எலெக்ட்ரிக் கார் மற்றும் பேட்டரி தயாரிப்பதற்கான தொழிற்சாலையைக் கட்டமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதனை நிராகரித்திருக்கிறது மத்திய அரசு. ஹைதராபாத்தைச் சேர்ந்த மெகா இன்ஜினியரிங் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்ட்சர் (MEIL) நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியாக இந்தத் திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்தத் திட்டமிட்டிருந்தது BYD. பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்த சீன நிறுவனத்திற்கான அனுமதியை மத்திய அரசு மறுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. BYD நிறுவனத்தின் உதவியுடன் MEIL-ன் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான ஒலெக்ட்ரா க்ரீன்டெக், ஏற்கனவே இரண்டு எலெக்ட்ரிக் பேருந்துகளை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இயங்கி வரும் BYD:
உலகளவில் டெஸ்லா நிறுவனத்துடன் போட்டியிட்டு வரும் BYD நிறுவனமானது, ஏற்கனவே இந்தியாவில் இயங்கி வருகிறது. சென்னையில் ஆண்டுக்கு 10,000 எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை ஏற்கனவே நடத்தி வருகிறது BYD. புதிய தொழிற்சாலை மூலம் கூடுதலாக ஆண்டுக்கு 15,000 எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது. மேலும், அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சம் எலெக்ட்ரிக் கார்களை என்ற அளவிற்கு உற்பத்தி உயர்த்தவும் BYD திட்டமிட்டிருந்தது. இந்த ஆண்டின் கடைசி காலாண்டில் தங்களுடைய புதிய எலெக்ட்ரிக் லக்சரி செடானான சீலை இந்தியாவில் வெளியிடவும் அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.