பயணத்திற்கு முன் டிப்ஸ் கேட்கக் கூடாது: ஓலா, ஊபர், ராபிடோ நிறுவனங்களுக்கு மத்திய அரசு போட்ட தடை
செய்தி முன்னோட்டம்
ஓலா, ஊபர் மற்றும் ராபிடோ போன்ற வாகன முன்பதிவு செயலிகளில், பயணம் தொடங்குவதற்கு முன்பாகவே 'Advance Tip' கேட்கும் அம்சத்தை உடனடியாக நீக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் மொபைல் செயலிகள் மூலம் இயங்கி வரும் பைக் டாக்ஸி மற்றும் கார் சேவை நிறுவனங்கள், பயணிகள் வாகனம் ஏறுவதற்கு முன்போ அல்லது ஓட்டுநர்கள் பயணத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்போ டிப்ஸ் கேட்கக் கூடாது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நடைமுறை மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல்களுக்கு முற்றிலும் எதிரானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீக்கம்
செயலிகளில் இருந்து நீக்கப்படும் அம்சங்கள்
"Tip கொடுத்தால் உடனடியாக வாகனம் கிடைக்கும்" அல்லது "ஓட்டுநர் விரைவாக ஒப்புக்கொள்வார்" என்றவாறு பயணிகளை வற்புறுத்தும் வாசகங்களை செயலிகளில் இனி காட்டக்கூடாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய அம்சங்கள் பயணிகளுக்கு தேவையில்லாத நிதி நெருக்கடியையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்தன.
பயணக் கட்டணத்தை செலுத்தும் போதோ அல்லது பயணம் முழுமையாக நிறைவடைந்த பின்னரோ மட்டுமே, பயணிகளின் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் டிப்ஸ் வழங்கும் வசதி இடம்பெற வேண்டும் என அரசு நிபந்தனை விதித்துள்ளது.
சமீபகாலமாக ஓட்டுநர்களின் சவாரி மறுப்புகள் மற்றும் கூடுதல் தொகை கேட்டுப் பயணிகளுக்கு வரும் மெசேஜ்கள் குறித்துப பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
அவற்றை கவனத்தில் கொண்டு நுகர்வோரின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.