கார்களை வீட்டிற்கு வெளியே நிறுத்துங்கள்: தீ விபத்து அபாயத்தால் 7.20 லட்சம் பிஎம்டபிள்யூ கார்களுக்கு அவசர எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட 7,20,796 பிஎம்டபிள்யூ கார்களில் தீ விபத்து ஏற்படும் அபாயம் கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து, வாகன உரிமையாளர்கள் தங்கள் கார்களை வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கு வெளியே நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாட்டர் பம்ப் உடன் இணைக்கப்பட்டுள்ள மின் இணைப்பில் முறையான பாதுகாப்பு இல்லாததால் தண்ணீர் அல்லது ஈரப்பதம் உள்ளே புகும் வாய்ப்புள்ளது. இதனால் கார் அணைக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் போதும் மின்கசிவு ஏற்பட்டுத் தீப்பிடிக்கக்கூடும் என அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் எச்சரித்துள்ளது.
தொடரும் பிரச்சினைகள்
2024 பழுதுபார்ப்புக்குப் பிறகும் தொடரும் பிரச்சினையால் மீண்டும் திரும்பப் பெறும் பிஎம்டபிள்யூ
இந்த குறிப்பிட்ட 7,20,796 கார்களும் ஏற்கனவே கடந்த 2024 ஆம் ஆண்டு இதே வாட்டர் பம்ப் கோளாறிற்காக திரும்பப் பெறப்பட்டு பழுதுபார்க்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் முந்தைய பழுதுபார்ப்புகள் இப்பிரச்சினையை முழுமையாகத் தீர்க்காத நிலையில், பழுதுபார்க்கப்பட்ட கார்களிலும் சுமார் பத்து தீ விபத்து சம்பவங்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளன.
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படாத போதிலும், முன்பு பழுதுபார்க்கப்பட்ட கார்களையும் மீண்டும் சரிசெய்ய வேண்டும் என பிஎம்டபிள்யூ அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாடல்கள்
2012 முதல் 2018 வரையிலான 3 சீரிஸ், 5 சீரிஸ் மற்றும் X சீரிஸ் மாடல்கள் பாதிப்பு
இந்த அவசர திரும்பப் பெறுதல் பட்டியலில் 2012 முதல் 2018 வரை தயாரிக்கப்பட்ட பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பல்வேறு பிரபலமான மாடல்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக 2012-2016 3 சீரிஸ், 5 சீரிஸ் மற்றும் Z4 கார்கள், 2012-2015 X1, 2013-2017 X3, 2014-2016 2 சீரிஸ் மற்றும் 4 சீரிஸ் மாடல்கள் இதில் அடங்கும்.
மேலும் 2015-2018 X4 மற்றும் 2016-2018 X5 xDrive40e கார்களையும் திறந்தவெளியில் நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலவச பழுதுபார்ப்பு வசதி
டிசம்பர் 25 முதல் உரிமையாளர்களுக்குக் கடிதம் மற்றும் இலவச பழுதுபார்ப்பு வசதி
தற்போது இந்த தொழில்நுட்பக் கோளாறை நிரந்தரமாக சரிசெய்வதற்கான புதிய தீர்வை பிஎம்டபிள்யூ பொறியாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.
வரும் டிசம்பர் 25, 2026 முதல் பாதிக்கப்பட்ட கார் உரிமையாளர்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக் கடிதங்கள் அனுப்பப்பட உள்ளதோடு, அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தின் இணையதளத்தில் வாகன அடையாள எண்ணை கொடுத்து சரிபார்க்க முடியும்.
தீர்வு தயாரானதும் அங்கீகரிக்கப்பட்ட பிஎம்டபிள்யூ மையங்களில் முற்றிலும் இலவசமாக பழுதுபார்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.