மீண்டும் வருகிறது 'அவெஞ்சர் 220 ஸ்ட்ரீட்'.. பஜாஜின் திட்டம் என்ன?
2020-ம் ஆண்டு அவெஞ்சர் 220 ஸ்ட்ரீட் பைக்கின் விற்பனையை நிறுத்தியது பஜாஜ் நிறுவனம். ஆனால், தற்போது அதனை மீண்டும் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது அந்நிறுவனம். 2022-ல் விற்பனையை நிறுத்திய பல்சர் 220F மாடலை கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் அறிமுகப்படுத்தியது பஜாஜ். அதனைப் போலவே தற்போது 220 ஸ்ட்ரீட் மாடலையும் மறுஅறிமுகம் செய்யவிருக்கிறது. அவெஞ்சர் 220 க்ரூஸில் பயன்படுத்திய அதே இன்ஜினையே புதிய 220 ஸ்ட்ரீட்டிலும் பயன்படுத்தவிருக்கிறது பஜாஜ் நிறுவனம். பல்சர் 220F மாடலிலும் இதே இன்ஜினையே பஜாஜ் பயன்படத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அவெஞ்சர் 220 க்ரூஸ், அவெஞ்சர் 160 ஸ்ட்ரீட் ஆகிய மாடல்கள் இந்தியாவில் விற்பனையில் இருக்கின்றன.
இஞ்சின், வசதிகள் மற்றும் விலை:
மேற்கூறியது போல அவெஞ்சர் 220 க்ரூஸில் பயன்படுத்தப்பட்ட, 19hp பவர் மற்றும் 17.5Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய ஏர்/ஆயில் கூல்டு 220சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜினையே 220 ஸ்ட்ரீட்டில் பயன்படுத்தவிருக்கிறது பஜாஜ். க்ரூஸைப் போலவே முன்பக்கம் டிஸ்க்கும், பின்பக்கம் ட்ரம் பிரேக்குகளையும் கொடுக்கவிருக்கிறது. ஸ்டைலிங்கைப் பொருத்தவரை தற்போது விற்பனையில் இருக்கும் 160 ஸ்டரீட் மாடலின் ஸ்டைலிங்கையே 220 ஸ்ட்ரீட் ஒத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரூ.1,38,368 எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது அவெஞ்சர் க்ரூஸ் 220. எப்போதும் க்ரூஸ் மாடல் பைக்குகளை விட ஸ்ட்ரீட் மாடல் பைக்குளின் விலை குறைவாகவே இருக்கும். எனவே, இதனை விட குறைவான விலையிலேயே அவெஞ்சர் 220 ஸ்ட்ரீட் பைக்கை மறுவெளியீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.