
2025 கம்யூனிட்டி தினத்தில் மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த ஏதர் எனர்ஜி திட்டம்
செய்தி முன்னோட்டம்
ஏதர் எனர்ஜி தனது மூன்றாவது வருடாந்திர கம்யூனிட்டி தினம் ஆகஸ்ட் 30, 2025 அன்று நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த முக்கிய தயாரிப்பு வெளிப்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஏதர் எனர்ஜி இந்த நிகழ்வைப் பயன்படுத்தி அதன் புதிய EL தளம், பல கான்செப்ட் மாடல்கள் மற்றும் அடுத்த தலைமுறை சார்ஜிங் மற்றும் மென்பொருள் தீர்வுகளை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வின் சிறப்பம்சம், புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் ஏதரின் தயாரிப்பை விரிவுபடுத்த வடிவமைக்கப்பட்ட EL தளத்தை அறிமுகப்படுத்துவதாகும்.
புதிய தளம்
புதிய EL தளத்தில் சிறப்பம்சங்கள்
இந்த புதிய தளம் மேம்படுத்தப்பட்ட பவர்டிரெய்ன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அம்சங்களைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் அதன் நிரூபிக்கப்பட்ட பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் ஏதர்ஸ்டாக் மென்பொருள் உட்பட, தற்போதுள்ள ஏதர் 450 தளத்திலிருந்து முக்கிய கூறுகளை ஒருங்கிணைக்கிறது. EL தளம், ஏதர் நிறுவனம், டிவிஎஸ் மோட்டார்ஸ், ஓலா எலக்ட்ரிக், ஹீரோ மோட்டோகார்ப்பின் விடா மற்றும் பஜாஜ் ஆட்டோ போன்ற போட்டியாளர்கள் ஏற்கனவே செயல்பட்டு வரும், போட்டித்தன்மை வாய்ந்த ரூ.1 லட்சத்திற்கும் குறைவான பிரிவில் நுழைய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏதர், EL தளத்தை அடிப்படையாகக் கொண்ட கான்செப்ட் மாடல்களையும் அறிமுகப்படுத்தும், இருப்பினும் விரிவான விவரங்கள் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளன.
சார்ஜர்கள்
ஃபாஸ்ட் சார்ஜ்சர்கள் அறிமுகப்படுத்த திட்டம்
கூடுதலாக, சார்ஜிங் வேகம் மற்றும் பயனர்களுக்கான வசதியை மேம்படுத்துவதற்காக அதன் அடுத்த தலைமுறை ஃபாஸ்ட் சார்ஜர்களை வெளியிட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன் தனியுரிம மென்பொருளான AtherStack 7.0 இன் புதுப்பிக்கப்பட்ட பதிப்பையும் வெளியிட உள்ளது. இது அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப மேம்பாடுகளை வழங்கும் எனத் தெரிகிறது. முன்னதாக, ஏப்ரல் 2024 இல் நடைபெற்ற முந்தைய கம்யூனிட்டி தினத்தில், Halo ஸ்மார்ட் ஹெல்மெட் மற்றும் AtherStack 6.0 உடன், பிராண்டின் முதல் குடும்ப ஸ்கூட்டரான ஏதர் ரிஸ்ட்டா அறிமுகமானது. வரவிருக்கும் நிகழ்வு, அதன் எலக்ட்ரிக் வாகன சுற்றுச்சூழல் அமைப்பை விரிவுபடுத்துவதற்கும் வளர்ந்து வரும் மின்சார மொபிலிட்டி சந்தையில் அதன் நிலையை வலுப்படுத்துவதற்கும் ஏதர் உறுதியுடன் இருப்பதை இது வெளிப்படுத்துகிறது.