Used Cars வாங்கப்போறீங்களா? பயன்படுத்தப்பட்ட கார் வாங்கும் முன் இதை கவனத்தில் கொள்ளுங்கள்
கொரோனா தொற்றுநோயின் தாக்கம் குறைந்துவிட்டாலும், அது இந்திய வாகன சந்தையில் ஏற்படுத்திய இடையூறுகள் இன்னும் முழுமையாக குறைந்தபாடில்லை. அதுமட்டுமின்றி, வாகன சந்தையில் பல போக்குகளையும் மாற்றி அமைத்துள்ளது. அது போன்ற ஒரு போக்கு பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான தேவை. இது தொற்றுநோய்க்குப் பிறகு மிகப்பெரும் அளவில் அதிகரித்துள்ளது. வேலை இழப்புகள் மற்றும் ஊதிய குறைப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை உள்ளிட்ட பல காரணங்களால் கார் வாங்குபவர்களை, பயன்படுத்திய கார்களை நோக்கி சிந்திக்க தூண்டியது. மேலும், பல கார் உரிமையாளர்கள் இஎம்இ செலுத்துவதில் உள்ள சிக்கலால் தங்கள் கார்களை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த காரணிகளால் பல நன்கு பராமரிக்கப்பட்ட மற்றும் ஒப்பீட்டளவில் புதிய வாகனங்களை பயன்படுத்தப்பட்ட கார் சந்தையில் கிடைக்க ஆரம்பித்துள்ளது.
புதிய வாகன விற்பனையை விட பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை அதிகரிப்பு
உண்மையில், இந்த ஆண்டு கடந்த ஆகஸ்ட் வரை புதிய கார்கள் இந்தியா முழுவதும் ஆண்டுக்கு 38 லட்சம் கார்களை விற்பனை செய்தாலும், பயன்படுத்தப்பட்ட கார்கள் 50 மில்லியனுக்கும் அதிகமாக விற்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட கார் சந்தை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சந்தையில் 17 சதவிகிதம் மட்டுமே ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலான பயன்படுத்தப்பட்ட கார் கொள்முதல் மற்றும் விற்பனை முறைசாரா முறையில் செய்யப்படுகின்றன. நீங்கள் முதல்முறையாக கார் வாங்கும்போது அது உங்களுக்கு மிகவும் உணர்ச்சிப்பூர்வமான ஒன்றாக இருக்கும் சூழலில், பயன்படுத்திய காரை வாங்கும் போது ஒரு நல்ல டீலை பெற பின்வரும் விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்.
சரியான பட்ஜெட் திட்டமிடுவது முக்கியம்
பொதுவாக புதிய கார் வாங்கும்போது பலரும் அலட்சியமாக கருதும் விஷயங்களில் ஒன்றாக பட்ஜெட் உள்ளது. உங்கள் நிதி நிலைமையை பாதிக்காத வகையில், நீங்கள் வாங்கக்கூடிய பட்ஜெட்டை எப்போதும் அமைக்கவும். இது அதிக செலவு செய்வதைத் தவிர்க்க உதவும். ஒரு பயன்படுத்த காருக்கான டீல் எவ்வளவு கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், அந்த காரை சொந்தமாக்க உங்கள் பட்ஜெட்டைத் தாண்டி செல்லாதீர்கள். மேலும், காருக்கான உங்கள் பட்ஜெட்டை அமைக்கும் போது, இன்சூரன்ஸ் போன்ற அதிக செலவுகளை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி, எரிபொருள் கட்டணங்கள், பராமரிப்புச் செலவுகள் போன்றவற்றை உள்ளடக்கிய காரின் உரிமையுடன் தொடர்புடைய தொடர்ச்சியான செலவுகளையும் கருத்தில் கொள்ளுங்கள்.
சந்தையை ஆராயுங்கள்
இது மிகவும் முக்கியமானது. புதிய அல்லது பயன்படுத்திய கார்களைப் பொருட்படுத்தாமல், வாகனம் வாங்கும் செயல்முறையின் முக்கியமான பகுதி சந்தையை ஆய்வு செய்வதாகும். கார்களை அவற்றின் விலை மற்றும் நிபந்தனைகளைச் சரிபார்க்க தற்போது பல ஆன்லைன் தளங்கள் உள்ள நிலையில், அதை முழுமையாக ஆய்வு செய்யுங்கள். மேலும், ஆஃப்லைனில் பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையாளர்களைப் பார்வையிடவும். மைலேஜ், உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டு மற்றும் வாகனத்தின் நிலை போன்ற காரணிகளைக் கருத்தில் கொள்ளுங்கள். மேலும், எந்த வகையான கார் உங்களுக்கு மிகவும் பொருத்தமானது என்பதை சரிபார்க்கவும். ஒரு கார் விலை அதிகமாக உள்ளதா என்பதைப் புரிந்துகொள்ள சந்தை ஆராய்ச்சி உங்களுக்கு உதவும்.
சரியான விற்பனையாளரைத் தேர்வுசெய்க
மேலே குறிப்பிட்டதைப் போல், முழுமையாக ஆய்வு செய்து, சரியான விற்பனையாளரைத் தேர்ந்தெடுக்கவும். சந்தையில் பல பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையாளர்கள் உள்ளனர். பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பதற்காகவே பல நிறுவனங்கள் உள்ள நிலையில், அவை வாரன்டி போன்ற சில சலுகைகளை வழங்குகிறார்கள். இருப்பினும், இதுபோன்ற நிறுவனங்கள் பெரும்பாலும் காரின் சந்தை மதிப்பை விட அதிக கட்டணம் வசூலிப்பதைக் காணலாம். மறுபுறம், நீங்கள் ஒரு சுயமாக கார் விற்பனையில் ஈடுபடும் தனிப்பட்ட விற்பனையாளரிடம் சென்று விலையை பேச்சுவார்த்தை நடத்தலாம். இருப்பினும், இந்த சந்தர்ப்பங்களில், விற்பனையாளரால் ஒரு உத்தரவாதம் அல்லது ஆவணத்தை பூர்த்தி செய்வது சாத்தியமில்லை. எனவே, இந்த காரணிகளை மதிப்பிட்டு, சரியான விற்பனையாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் அவற்றை ஒப்பிட்டுப் பாருங்கள்.
காரின் வரலாறை அறிவது அவசியம்
நீங்கள் வாங்கவிருக்கும் காரின் விவரங்களை அறிந்து கொள்வதில் இது ஒரு முக்கியமான பகுதியாகும். நீங்கள் எங்கிருந்து, யாரிடமிருந்து பயன்படுத்திய காரை வாங்கினாலும், வாகனத்தின் வரலாறு அறிக்கையைப் பெறுங்கள். இது காரின் நிலை, பராமரிப்புப் பதிவுகள், விபத்துகள் போன்ற முக்கிய விவரங்களை வெளிப்படுத்தும். இதை நீங்கள் சரியாக கவனத்தில் கொள்ளவில்லை என்றால், ஆரம்பத்தில் கார் நன்றாக இருப்பதுபோல் தோன்றினாலும், பிற்காலத்தில் உங்களுக்குச் சிக்கலைத் தர ஆரம்பிக்கலாம். கார்களைப் பற்றி உங்களுக்கு விவரமாகத் தெரிந்தால், எப்போதும் காரை தனிப்பட்ட முறையில் பரிசோதிக்கவும். இல்லையெனில் நம்பிக்கையான தொழில்நுட்ப நிபுணரை வைத்து வாகனத்தின் நிலையை தெரிந்து கொள்ளுங்கள்.
டெஸ்ட் டிரைவ் மற்றும் ஆவணங்களை சரிபார்த்தல்
மேலே கூறிய அனைத்து விஷயங்களிலும் திருப்தி ஏற்பட்ட பிறகு, காரை நீங்களே டெஸ்ட் டிரைவ் செய்து ஒருமுறை சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு டிரைவிங் தெரியவில்லை எனில், நம்பிக்கையான நபரை வைத்து காரை ஒருமுறை ஓட்டிப் பாருங்கள். அதன் பின்னர், காரின் ஆவணங்களை வாங்கி முழுமையாக சரிபாருங்கள். ஆவணங்கள் மற்றும் அதன் விவரங்களைப் புரிந்துகொள்வதில் எப்போதும் கவனம் செலுத்துங்கள். மேலும், முடிந்தவரை உங்களுக்குச் சாதகமாக விதிமுறைகளை அமைத்து விற்பனையாளருடன் பேச்சுவார்த்தை நடத்தவும். விதிமுறைகள் உங்களுக்கு உகந்ததல்ல என்று நீங்கள் கருதினால், ஒப்பந்தத்திலிருந்து விலகுவதைக் கவனியுங்கள். உங்களுக்கு முழுமையாக திருப்தி இருந்தால் மட்டுமே பயன்படுத்தப்பட்ட காரை வாங்க ஒப்பந்தம் செய்யுங்கள்.