கிரெட்டாவிற்கு பிறகு மேலும் மூன்று எலக்ட்ரிக் கார்கள்; ஹூண்டாய் இந்தியா அதிரடி திட்டம்
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட், வரும் ஆண்டுகளில் தங்களது மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை கணிசமாக விரிவுபடுத்தப் போவதாக புதன்கிழமை (அக்டோபர் 9) அறிவித்தது. முன்னதாக, நிறுவனம் இந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் கிரெட்டா எலக்ட்ரிக் காரை வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், அதன் பிறகு அடுத்த சில ஆண்டுகளில் மேலும் மூன்று மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. பேட்டரி பேக்குகள், பவர் ட்ரெயின்கள் மற்றும் பேட்டரி செல்கள் ஆகியவற்றிற்கான உள்ளூர்மயமாக்கப்பட்ட விநியோகச் சங்கிலியை இந்தியாவில் உருவாக்கவும் ஹூண்டாய் நிறுவனம் முதலீடு செய்கிறது. இதன்மூலம் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைத்து உள்நாட்டுத் தொழில்களுக்கு ஆதரவளிப்பதோடு, செலவையும் கணிசமாக குறைக்கலாம் என திட்டமிட்டுள்ளது.
அடுத்த பத்து ஆண்டுகளுக்கு திட்டம் வகுத்துள்ள ஹூண்டாய்
எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தும் ஹூண்டாய், சார்ஜிங் வரம்பில் உள்ள கவலையை நிவர்த்தி செய்வதற்கும், மின்சார வாகனங்களை பரவலாக ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஹூண்டாய் இந்திய சந்தைக்கு எந்த எலக்ட்ரிக் வாகனங்களைத் திட்டமிடுகிறது என்பது தெரியவில்லை. எனினும், நிச்சயம் டாடா பஞ்சிற்கு போட்டியாக ஒரு மலிவு விலை எலக்ட்ரிக் காரை முதலில் களமிறக்கும் எனத் தெரிகிறது. அடுத்த பத்தாண்டுகளில் இந்நிறுவனம் ₹32,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இது இந்திய சந்தையில் அதன் நீண்ட கால அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. இதற்கிடையே, தென்கொரியாவுக்கு வெளியே, முதன்முறையாக இந்திய பங்குச் சந்தையில் ஹூண்டாய் விரைவில் ஐபிஓவையும் வெளியிட திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.