மாயமான நேபாள ஹெலிகாப்டர், மரத்தில் மோதி விபத்து; 5 சடலங்கள் மீட்பு
நேபாளத்தில், இன்று காலை 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் திடீரென தொடர்பை இழந்து மாயமானதை அடுத்து, அதை தேடும் பணி தீவிரமடைந்தது. அப்போது, லம்ஜூரா என்ற இடத்தில், எவெரெஸ்ட் சிகரத்தில் உள்ள ஒரு மரத்தில் மோதி, ஹெலிகாப்டர் உடைந்து விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது. உடைந்த ஹெலிகாப்டரின் சிதிலங்கள் மற்றும் அதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும், ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. உள்ளூர் நேரப்படி, இன்று காலை, 10 :04 மணிக்கு, சொலுகும்புவில் உள்ள சுர்கியில் இருந்து, தலைநகர் காத்மாண்டுக்கு பயணப்பட்ட ஹெலிகாப்டர், 10.12 மணிக்கு ரேடாரின் தொடர்பை இழந்துள்ளது.
ஹெலிகாப்டரில் பயணித்த வெளிநாட்டவர்கள்
முதற்கட்ட தகவல்களின்படி, விமானியுடன் சேர்த்து மொத்தம் 6 பேர் பயணித்த இந்த ஹெலிகாப்டரை, மூத்த கேப்டன் சேட் குருங் என்பவர் இயக்கியுள்ளார். ஹெலிகாப்டரில் பயணித்த ஐந்து பயணிகளும் மெக்ஸிகோ நாட்டை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. நேபாளத்தில் பருவமழை காரணமாக, இந்த ஹெலிகாப்டரின் வழித்தடம் மாற்றப்பட்டு, வேறு பாதையில் இயக்கப்பட்டுள்ளது. தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டது தொடங்கிய தேடுதல், மூன்று மணிநேரம் நீடித்ததாக கூறுகிறார்கள். நேபாளத்தில் அடிக்கடி ஹெலிகாப்டர் மற்றும் விமான விபத்துகள் நடப்பது வாடிக்கையாகவே இருந்து வருகிறது. கடைசியாக கடந்த ஜனவரியில் நடந்த ஒரு விமான விபத்தில், 72 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.