அடுத்த தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்: WHO தலைவர்
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில்,கோவிட்-19 தொற்றுநோயை விட "கொடிய" தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின்(WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார். "தற்போது கொரோனா உலகளாவிய சுகாதார அவசரநிலையாக இல்லை என்பற்காக, அது உலகளாவிய சுகாதார அச்சுறுத்தலாகவும் இல்லை என்று நினைக்கக்கூடாது." என்று கெப்ரேயஸ் கூறியுள்ளார். மேலும் அவர், உலகை அச்சுறுத்தும் புதிய கொரோனா மாறுபாடுகள் உருவாக வாய்ப்பிருக்கிறது என்றும் கொரோனாவை விட கொடிய நோய்க்கிருமி வெளிப்பட வாய்ப்பிருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார். உலக சுகாதார அமைப்பின் தலைவர் 76வது உலக சுகாதார சபையில் தனது அறிக்கையை சமர்ப்பித்த போது இவ்வாறு தெரிவித்தார்.
அடுத்த தொற்றுநோய் கண்டிப்பாக வரும்: டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்
"அடுத்த தொற்றுநோய் வரும்போது, அடுத்த தொற்றுநோய் கண்டிப்பாக வரும் அப்போது- தீர்க்கமாக, கூட்டாக மற்றும் சமமாக பதிலளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும்," என்று அவர் மேலும் அறிவுறுத்தினார். 2030 காலக்கெடுவைக் கொண்ட நிலையான வளர்ச்சி இலக்குகளை(SDGs) கோவிட்-19 பாதித்தது என்றும் 2017 உலக சுகாதார சபையில் அறிவிக்கப்பட்ட டிரிபிள் பில்லியன் இலக்குகளை நோக்கிய முன்னேற்றத்தையும் கொரோனா பாதித்தது என்றும் அவர் கூறியுள்ளார். ஐந்தாண்டு முன்முயற்சியானது, மேலும் ஒரு பில்லியன் மக்கள் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பைக் கொண்டிருப்பதையும், மேலும் ஒரு பில்லியன் மக்கள் சுகாதார அவசரநிலைகளிலிருந்து சிறப்பாகப் பாதுகாக்கப்படுவதையும், மேலும் ஒரு பில்லியன் மக்கள் சிறந்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை அனுபவிப்பதையும் உறுதிப்படுத்துகிறது.