LOADING...
வங்கதேசத்தில் தாரிக் ரஹ்மான் ஆட்சி: இந்தியாவின் உறவுக்கு சாதகமா? பாதகமா?
BNP, இந்தியாவுடன் நல்லுறவை பேணுவதை கொள்கையாக கொண்டுள்ளது

வங்கதேசத்தில் தாரிக் ரஹ்மான் ஆட்சி: இந்தியாவின் உறவுக்கு சாதகமா? பாதகமா?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 13, 2026
02:00 pm

செய்தி முன்னோட்டம்

பங்களாதேஷ் நாடாளுமன்ற தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (BNP) மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில், இது இந்தியாவிற்கு ஏன் ஒரு சிறந்த வாய்ப்பாகக் கருதப்படுகிறது என்பது குறித்து அரசியல் வல்லுநர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைக்கின்றனர். லைவ் மின்ட் வெளியிட்டுள்ள செய்தியின் படி, BNP அரசு, பல ஆண்டுகளாக இந்தியாவுடன் நல்லுறவை பேணுவதை கொள்கையாக கொண்டுள்ளது. அதன்படி, தற்போது இறுக்கமாக இருக்கும் இருநாட்டின் உறவும், புதிய தலைமையினால் எப்படி மாறக்கூடும் என ஒரு பார்வை.

குறிப்புகள்

இரு நாட்டின் உறவில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை

புதிய தொடக்கத்திற்கான வாய்ப்பு: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் வெளியேற்றத்திற்கு பிறகு, வங்கதேசத்தில் நிலவி வந்த அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு இந்த தேர்தல் முடிவு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தாரிக் ரஹ்மான் தலைமையிலான ஒரு நிலையான அரசு அமைவது, இந்தியா - வங்கதேச உறவில் தேங்கியிருந்த சுமுகமற்ற நிலையை மாற்றி, ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்க வாய்ப்பளிப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். 2. ஜமாத்-இ-இஸ்லாமியை விடச் சிறந்த தெரிவு: தீவிரவாத போக்குடைய ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற கட்சிகள் ஆட்சியைப் பிடிப்பதை விட, ஏற்கனவே ஆட்சி அனுபவம் கொண்ட பிஎன்பி (BNP) கட்சி அதிகாரத்திற்கு வருவது இந்தியாவிற்கு பாதுகாப்பு ரீதியாக சாதகமானது. பிஎன்பி கட்சியுடன் இந்தியா ஏற்கனவே பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுபான்மையினர்

சிறுபான்மையினர் பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகள் மேம்படும்

ஹசீனாவுக்கு பிந்தைய வங்கதேசத்தில், இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்தன. தாரிக் ரஹ்மான் தனது தேர்தல் பிரசாரத்தின் போது உள்ளடக்கிய மற்றும் பாதுகாப்பான வங்கதேசத்தை உருவாக்குவதாக உறுதியளித்துள்ளார். இது எல்லையோர பாதுகாப்பு மற்றும் சிறுபான்மையினர் நலன் குறித்து கவலை கொண்டுள்ள இந்தியாவிற்கு நிம்மதி அளிக்கும் விஷயமாகும். ஆசியாவிலேயே வங்கதேசத்தின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இந்தியா உள்ளது. ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமையும் போது, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் பொருளாதார திட்டங்கள் எவ்விதத் தடையுமின்றி தொடர முடியும்.

Advertisement