8 நாடுகளின் மீட்புக் குழுக்களை நேபாளம் நிராகரித்தது ஏன்? பின்னணித் தகவல்கள்
செய்தி முன்னோட்டம்
நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் பலி எண்ணிக்கை 472 ஆக உயர்த்துள்ள நிலையில், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 8 வெளிநாடுகள் அனுப்ப முன்வந்த தேடல் மற்றும் மீட்புக் குழுக்களை நேபாளத்தின் பாலேன் ஷா அரசு நிராகரித்துள்ளது. தங்கள் நாட்டின் ராணுவம், காவல்துறை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு முகமைகளே நிலச்சரிவு மற்றும் வெள்ள மீட்புப் பணிகளை சமாளிக்கப் போதுமான திறன் கொண்டவை என நேபாள வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிராகரிப்பு
எந்தெந்த நாடுகளின் உதவிகள் நிராகரிக்கப்பட்டன?
நேபாளத்திற்கு தங்கள் நாட்டின் சிறப்பு மீட்பு குழுக்களை அனுப்பப் பின்வரும் நாடுகள் விருப்பம் தெரிவித்திருந்தன.
ஆசியா: இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, பங்களாதேஷ், இலங்கை
மேற்கு நாடுகள்: அமெரிக்கா, ஐக்கிய ராஜ்யம் (UK)
இருப்பினும், வெளிநாட்டு மீட்புக் குழுக்களுக்கான அவசிய தற்போதைய சூழலில் இல்லை என நேபாள வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லோக் பகதூர் சேத்ரி தெளிவுபடுத்தியுள்ளார்.
காரணம்
வெளிநாட்டு மீட்புக் குழுக்களை நிராகரிக்க 2015 பூகம்ப பாடமே காரணம்
2015-ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட கோர்க்கா நிலநடுக்கத்தின் போது (9,000 பேர் பலி), உலகெங்கிலுமிருந்து ஏராளமான வெளிநாட்டு மீட்புக் குழுக்கள் ஒரே நேரத்தில் நேபாளத்திற்கு வந்தன.
இதனால் விமான நிலையம் முதல் மீட்புக் களங்கள் வரை கடுமையான நிர்வாகக் குழப்பங்களும், ஒருங்கிணைப்புச் சிக்கல்களும் ஏற்பட்டன.
அந்த அனுபவத்தை கருத்தில் கொண்டு, இம்முறை தேடல் பணிகளைத் தங்கள் சொந்த ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க நேபாள அரசு முடிவெடுத்துள்ளது.
நிதியுதவி
நிதியுதவி மற்றும் பொருட்களை வரவேற்கும் நேபாளம்
மீட்பு குழுக்களைத் தவிர்த்தாலும், நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி உதவிகளை பெற நேபாளம் சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்தியா ஏற்கனவே 47.5 டன் எடையுள்ள கூடாரங்கள், போர்வைகள், உணவுகள் மற்றும் மருத்துவப் பொருட்களை இரு விமானங்களில் அனுப்பி வைத்துள்ளது.
மேலும் அடித்து செல்லப்பட்ட பாலங்களுக்கு பதிலாகப் பயன்படுத்த 'பெய்லி பாலங்களை' வழங்கவும் தயாராக உள்ளது.
அமெரிக்கா, ஐக்கிய ராஜ்யம், உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி(ADB) ஆகியவை நிதி உதவி வழங்க முன்வந்துள்ளன.
ஆப்பிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் நிதியுதவி அளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
அனைத்து நிதி உதவிகளும் பிரதமரின் நிவாரண நிதி மூலமாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என நேபாள அரசு அறிவித்துள்ளது.