Loading...
ரஷ்யா நேட்டோ நாடுகளைத் தாக்காது! சிஐஏ இயக்குநரின் திடீர் ரஷ்ய பயணத்திற்குப் பின் டிரம்ப் விளக்கம்
ரஷ்யா நேட்டோ நாடுகளைத் தாக்காது என டிரம்ப் நம்பிக்கை

ரஷ்யா நேட்டோ நாடுகளைத் தாக்காது! சிஐஏ இயக்குநரின் திடீர் ரஷ்ய பயணத்திற்குப் பின் டிரம்ப் விளக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 28, 2026
11:13 am

செய்தி முன்னோட்டம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேட்டோ அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் எல்லைகள் மீது எந்தவொரு ராணுவத் தாக்குதலையும் நடத்த மாட்டார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியாகத் தெரிவித்துள்ளார். சிஐஏ இயக்குநர் ஜான் ரட்க்ளிஃப் ரஷ்யாவிற்குத் திடீர் பயணம் செய்து, நேட்டோ நாடுகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என எச்சரித்ததாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், டிரம்ப் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

ரகசிய பயணம்

சிஐஏ இயக்குநர் ஜான் ரட்க்ளிஃபின் ரகசிய ரஷ்யப் பயணம்

அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் (சிஐஏ) இயக்குநர் ஜான் ரட்க்ளிஃப் இந்த வார தொடக்கத்தில் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிற்கு ரகசிய பயணம் மேற்கொண்டார்.

உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் சூழலில், நேட்டோ உறுப்பு நாடுகளின் மீது ரஷ்யா குறிப்பிட்ட அளவிலான தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்ததைத் தொடர்ந்து, இந்த மோதலைத் தவிர்க்கும் நோக்கில் அவர் மாஸ்கோ சென்றதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல், சிஎன்என் போன்ற முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

சாதாரண நடைமுறை

ஊடகச் செய்திகளை சாதாரண நடைமுறை என நிராகரித்த டிரம்ப்

இந்த விவகாரம் குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் கேட்டபோது, "நான் புடினுடன் நல்ல முறையில் பேசியுள்ளேன், அவர் நேட்டோ பகுதிகளைத் தாக்க மாட்டார்.

சிஐஏ இயக்குநரின் பயணம் ஒரு சாதாரண நடைமுறைப் பயணமே தவிர, ஊடகங்கள் கூறுவது போல் எச்சரிக்கை விடுப்பதற்காக அல்ல" என்று டிரம்ப் கூறினார்.

மேலும், ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரவே அமெரிக்க அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ADVERTISEMENT

பயமுறுத்தும் கதைகள்

பயமுறுத்தும் கதைகள் என கிரெம்ளின் மாளிகை மறுப்பு

அமெரிக்க ஊடகங்களின் இந்த அறிக்கைகளை ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

"தற்போது இதுபோன்ற பல பயமுறுத்தும் கதைகள் வெளியிடப்பட்டு வருகின்றன, உண்மை நிலவரத்திற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை" என்று அவர் கூறினார்.

ரஷ்ய உளவுத் துறைத் தலைவர் செர்ஜி நரிஷ்கின், சிஐஏ இயக்குநருடன் உளவுத்துறை சார்ந்த பொதுவான விஷயங்கள் குறித்தே ஆலோசிக்கப்பட்டதாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.

ADVERTISEMENT