JN.1 கோவிட்-19 திரிபு,'ஆர்வத்தின் மாறுபாடு' என வகைப்படுத்தப்பட்டுள்ளது: WHO
உலக சுகாதார அமைப்பு (WHO),நேற்று, JN.1 கொரோனா வைரஸ்-ஐ "ஆர்வத்தின் மாறுபாடு" என்று வகைப்படுத்தியது. ஆனால் இது பொது சுகாதாரத்திற்கு அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்றும் கூறியது. "கிடைத்துள்ள சான்றுகளின் அடிப்படையில், JN.1-ஆல் கூடுதல் உலகளாவிய பொது சுகாதார ஆபத்து தற்போது குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது," WHO கூறியுள்ளது. JN.1 அதன் மூலக்கூறான BA.2.86 இன் ஒரு பகுதியாக ஆர்வத்தின் மாறுபாடாக வகைப்படுத்தப்பட்டது. தற்போதைய தடுப்பூசிகள், JN.1 மற்றும் COVID-19 வைரஸின் பிற பரவல் வகைகளிலிருந்து கடுமையான நோய் பாதிப்பு மற்றும் இறப்புக்கு எதிராக பாதுகாப்பதாக ஐக்கிய நாடுகளின் சபை கூறியது. தற்போது புழக்கத்தில் உள்ள மற்ற வகைகளுடன் ஒப்பிடும்போது, JN.1 அதிக ஆபத்தை விளைவிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் WHO கூறியது.
தயார் நிலையில் மத்திய அரசு
இரண்டு வருடங்களுக்கும் மேலாக கோவிட்-19 அறிகுறிகள் இல்லாத வாழ்க்கைக்குப் பிறகு (கிட்டத்தட்ட) தற்போது மீண்டும் அதன் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் கேரளாவில் இவ்வகை வைரஸ் தொற்றுகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அதிக ஆர்டி-பிசிஆர் சோதனைகள் உட்பட போதுமான சோதனைகளை உறுதிசெய்யவும், மரபணு வரிசைமுறைக்கான நேர்மறை மாதிரிகளை INSACOG ஆய்வகங்களுக்கு அனுப்பவும், மத்திய அரசு மாநிலங்களை எச்சரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
JN.1 கோவிட் மாறுபாட்டின் அறிகுறிகள்
கடந்த சில ஆண்டுகளில் காணப்பட்ட பிற கோவிட் வகைகளைப் போலவே, JN.1 தொற்றும் அறிகுறிகளைக் காட்டுகிறது. கோவிட் மாறுபாடு JN.1 ஆல் ஏற்படும் தொற்று காரணமாக ஏற்படும் பொதுவான அறிகுறிகள்: காய்ச்சல் மூக்கு ஒழுகுதல் தொண்டை வலி தலைவலி வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற லேசான இரைப்பை குடல் அறிகுறிகள் வயதானவர்களுக்கும், நோயெதிர்ப்பு குறைபாடுகள் உள்ளவர்களுக்கும் 'மூச்சுத்திணறல்' சோர்வு கடுமையான உடல்வலி மற்றும் தொண்டை புண் போன்ற அறிகுறிகளுடன் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும். இந்த தொற்று இளம்வயதினரை அதிகம் பாதிக்காவிட்டாலும், வயதானவர்கள் தங்கள் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது அவசியம். குறிப்பாக டயாபடீஸ், பிபி போன்ற சுகாதார நிலைமைகள் உள்ளவர்களுக்கு இந்த தொற்று ஆபத்தை ஏற்படுத்தும்.