இரண்டு நாட்களில் ரஷ்யாவை அதிர வைத்த இராணுவ கிளர்ச்சி
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் நீண்ட கால ஆட்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்த வாக்னர் ஆயுதமேந்திய கிளர்ச்சி முடிவுக்கு வந்ததை அடுத்து, ரஷ்யாவில் ஒரு பயங்கரமான அமைதி நிலவி வருகிறது. இந்த கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய யெவ்ஜெனி பிரிகோஜின் வழக்கத்திற்கு மாறாக அமைதியாகிவிட்டார். இதை "தேசத்துரோகம்" என்று கூறிய ரஷ்ய அதிபர் புதின், அதிலிருந்து பொது நிகழ்ச்சிகளில் எதிலும் கலந்து கொள்ளவில்லை. ரஷ்ய அரசாங்கம் தனது படைகளுக்கு எதிராக ஏவுகணைகளை ஏவுவதாக கூறிய வாக்னர் கூலிப்படையினர், கிளர்ச்சியைத் தொடங்கியதை அடுத்து, கடந்த சனிக்கிழமை ரஷ்யாவில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கூலிப்படையினர் ரஷ்ய இராணுவத் தளங்களைக் கைப்பற்ற போவதாக நேற்று முன்தினம் செய்திகள் வெளியாகின.
பக்முட்டை ரஷ்யா கைப்பற்றுவதற்கு பெரும் உதவியாக இருந்த வாக்னர் கூலிப்படை
இந்நிலையில், அந்நாட்டு அரங்கத்திற்கும் வாக்னர் குழுமத்திற்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து திடீரென இந்த இராணுவ புரட்சி நிறுத்தப்பட்டது. ரஷ்ய அதிபர் புதினுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்த நெருக்கடியைத் தணிப்பதற்காக இந்த ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, வாக்னர் கூலிப்படையின் தலைவர் பிரிகோஜினுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் கைவிடப்படும் என்றும், அவரது துருப்புக்கள் மீது வழக்குத் தொடரப்படாது என்றும் ரஷ்ய அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது. வாக்னர் என்பது ஒரு தனியார் கூலிப்படையாகும். உக்ரைனில் உள்ள பக்முட்டை ரஷ்யா கைப்பற்றுவதற்கு பெரும் உதவியாக இருந்தது இதே வாக்னர் கூலிப்படைதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவுக்கு இருந்த இந்த மிகப்பெரும் அச்சுறுத்தல் முடிவுக்கு வந்ததை அடுத்து, அந்நாட்டு அரசியலில் தற்போது கடுமையான அமைதி நிலவி வருகிறது.