பிரிட்டன் அரசின் புதிய சட்டம்.. எதிர்க்கும் வாட்ஸ்அப்.. என்ன நடக்கிறது?
பிரிட்டன் அரசு முன்மொழிந்துள்ள புதிய இணைய பாதுகாப்பு சட்டத்திற்க எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கின்றன குறுஞ்செய்தி சேவைத் தளங்களான வாட்ஸ்அப், சிக்னல் உள்ளிட்ட தளங்கள். இந்தப் புதிய சட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தத் தளங்கள் இணைந்து பிரிட்டன் அரசுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கின்றன. அது என்ன சட்டம், ஏன் அதனை இந்த நிறுவனங்கள் எதிர்க்கின்றன? பிரிட்டனில் உள்ள இணையப் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்தச் சட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேடுபொறிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பயனர்கள் பதிவிடும் உள்ளடக்கங்களுக்கு அந்தக் குறிப்பிட்ட நிறுவனங்களே பொறுப்பேற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்தப் புதிய சட்டம். தங்கள் தளங்களில் பயனர்கள் பதிவிடும் உள்ளடக்கங்களை சரிபார்க்க வேண்டியது அந்த நிறுவனத்தின் பொறுப்பு தான் என்பது இதன் சாரம்சம்.
குறுஞ்செய்தித் தளங்களுக்கு என்ன பிரச்சினை?
வாட்ஸ்அப் மற்றும் சிக்னல் உள்ளிட்ட குறுஞ்செய்தி சேவைத் தளங்கள் பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க எண்டு-டூ-எண்டு என்கிரிப்ஷன் வசதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், பயனர்கள் என்னவிதமான உள்ளடக்கங்களைப் பகிர்கிறார்கள் எனப் அந்த நிறுவனங்களாலேயே தெரிந்து கொள்ள முடியாது. அப்படி இருக்கும் போது, இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்தால் அது பயனர்களின் தனியுரிமையையும், மனித உரிமையையும் பாதிக்கும் செயலாக இருக்கும் என அந்தக் கடித்தத்தில் குறிப்பிட்டிருக்கின்றன. பிரிட்டன் அரசின் இந்தப் புதிய சட்டம் குறித்து ஐநாவும் எச்சரித்திருக்கிறது. தற்போது இருக்கும் வடிவிலேயே இந்த சட்டம் அலமாகும் பட்சத்தில் பிரிட்டனில் தங்கள் சேவையை நிறுத்திக் கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் அந்நிறுவனங்கள் பிரிட்டன் அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கின்றன.