ரஷ்ய கிளர்ச்சி: பெலாரஸுக்கு நாடு கடத்தப்பட்டார் வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின்
ரஷ்யாவில் இராணுவ கிளர்ச்சியை வழி நடத்தி, இரண்டு நாட்களுக்குள் ரஷ்ய அதிபர் புதினின் வயிற்றில் புளியை கரைத்த வாக்னர் கூலிப்படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் பெலாரஸ் நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். வாக்னர் தலைவர் பிரிகோஜின், தனது கூலிப்படையினர் மீது ரஷ்ய இராணுவம் தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டி வந்தார். ஆனால், ரஷ்ய அதிபர் புதின் தொடர்ந்து தனது பாதுகாப்பு படைகளுக்கு மட்டுமே துணை நின்றதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த வாக்னர் கூலிப்படையினர், கடந்த சனிக்கிழமை ரஷ்ய அரசாங்கத்திற்கு எதிராக படையெடுத்தனர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் 20 ஆண்டுகால ஆட்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியது இந்த வாக்னர் கிளர்ச்சி தான் என்று கூறப்படுகிறது.
கூலிப்படையின் ஆயுதங்கள் இராணுவத்திற்கு மாற்றப்பட இருக்கிறது
இந்த பெரும் கிளர்ச்சியை எதிர்கொண்ட ரஷ்ய அரசாங்கம், பிரிகோஜினுடன் அவசரமாக ஒரு ஒப்பந்தத்தை போட்டது. இதனையடுத்து, திடீரென அந்த கிளர்ச்சி நிறுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, வாக்னர் கூலிப்படையின் தலைவர் பிரிகோஜினுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் நேற்று கைவிடப்பட்டது. அவரது துருப்புக்கள் மீது வழக்குத் தொடரப்படாது என்றும் ரஷ்யா உறுதியளித்திருக்கிறது. இந்நிலையில், அவர் தற்போது பெலாரஸுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். எவ்ஜெனி பிரிகோஜின் பெலாரஸ் வந்தடைந்ததை அடுத்து, அந்நாட்டு தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ அவரை வரவேற்றார். மேலும், வாக்னர் கூலிப்படையின் ஆயுதங்கள் வழக்கமான இராணுவத்திற்கு மாற்றப்பட இருக்கிறது. அந்த கூலிப்படையை சேர்ந்த வீரர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேரலாம் அல்லது வீட்டுக்கு திரும்பலாம், அப்படி இல்லை என்றால் அவர்கள் பெலாரஸுக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.