அமெரிக்காவின் புதிய 'வாட்ச் லிஸ்ட்' பட்டியல்: இந்தியாவுக்கு மீண்டும் நெருக்கடி கொடுக்கும் டொனால்ட் டிரம்ப் அரசு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் நேற்று வெளியிட்ட 2026-ஆம் ஆண்டின் சிறப்பு 301 அறிக்கையில், அறிவுசார் சொத்துரிமை(IPR) பாதுகாப்பு மற்றும் அமலாக்கத்தில் உள்ள குறைபாடுகளைக் காரணம் காட்டி, இந்தியாவை மீண்டும் தனது 'முன்னுரிமை கண்காணிப்புப் பட்டியலில்' சேர்த்துள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றான இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமைகளைப் பாதுகாப்பதில் உள்ள சவால்கள் தொடர்ந்து நீடிப்பதாக அமெரிக்கா அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவுடன் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான விவகாரங்களை இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மற்றும் TPF மூலமாகத் தொடர்ந்து விவாதிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த வர்த்தகக் கட்டுப்பாடுகள் மற்றும் அழுத்தங்கள், குறிப்பாக இந்தியாவின் மருந்து தயாரிப்புத் துறை மற்றும் மென்பொருள் துறைகளில் சில தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
காரணம்
இந்தியா ஏன் தொடர்ந்து இந்தப் பட்டியலில் உள்ளது?
அமெரிக்கா தனது வர்த்தகக் கூட்டாளிகளின் காப்புரிமை, பதிப்புரிமை, மற்றும் வர்த்தக முத்திரை போன்ற அறிவுசார் சொத்துரிமை விதிகளை ஆண்டுதோறும் ஆய்வு செய்து இந்த பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்தியாவில் காப்புரிமை பெறுவதில் நிலவும் தேவையற்ற காலதாமதங்கள், கடுமையான விதிமுறைகளால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது மற்றும் காப்புரிமை ரத்து செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. Piracy மற்றும் போலிப் பொருட்கள் தயாரிப்பு இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க அரசு நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு இல்லை என்று அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் வர்த்தக ரகசியங்கள் மற்றும் சோதனைத் தரவுகளை பாதுகாப்பதில் போதிய சட்டப் பாதுகாப்பு இல்லை என்றும், பதிப்புரிமை தொடர்பான சட்ட நடைமுறைகள் முடிவடைய நீண்ட காலம் ஆவதாகவும் அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது.
பிற நாடுகள்
சர்வதேச அளவில் பிற நாடுகளின் நிலை
சர்வதேச அளவில் மேலும் பல நாடுகள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது. முன்னுரிமை கண்காணிப்புப் பட்டியலில், சிலி, சீனா, இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா மற்றும் வெனிசுலா உள்ளது. கண்காணிப்புப் பட்டியலில், பாகிஸ்தான், துருக்கி, பிரேசில், மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 19 நாடுகள் உள்ளது. மிகக் கடுமையான வகையில் வியட்நாம் உள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில், அமெரிக்க வர்த்தக சட்டங்களின்படி மிகவும் கடுமையான பிரிவான 'முன்னுரிமை பெற்ற வெளிநாடு' என்ற பிரிவின்கீழ் வியட்நாம் முதல் முறையாகச் சேர்க்கப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டு முதல் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தியும், அறிவுசார் சொத்துரிமைகளைப் பலப்படுத்துவதில் வியட்நாம் போதிய ஆர்வம் காட்டவில்லை என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.