இனி விசாவுக்கு அலைய வேண்டியதில்லை; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு குட் நியூஸ்!
எச்-1பி விசா வைத்திருக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், நாட்டை விட்டு வெளியேறாமல் விசாவை புதுப்பிக்கும் திட்டத்திற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களை இனி நாட்டை விட்டு வெளியேறாமல் தங்கள் விசாவைப் புதுப்பிக்க அனுமதிக்கும். முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் சோதனை அடிப்படையில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு தகவல் மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்களுக்கான வெள்ளை மாளிகை அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து திட்டம் ஜனவரி 2024இல் தொடங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக வெளியான தகவல்களின்படி, திட்டத்தின் முதல் தொகுப்பில், சுமார் 20,000 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் எச்-1பி விசாக்களை புதுப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
ஊழியர்களுக்கு மட்டுமே திட்டம் பொருந்தும்
இந்த திட்டம் குறித்த கூடுதல் விபரங்கள் இன்னும் அமெரிக்க வெளியுறவுத் துறையால் பகிரப்படவில்லை என்றாலும், இந்த விசா புதுப்பித்தல் திட்டம் வெளிநாட்டு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனக் கூறப்படுகிறது. ஊழியர்களுடன் தங்கியுள்ள அவர்களது வாழ்க்கைத் துணைவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது என்றும், அவர்கள் தங்கள் விசாக்களை புதுப்பிக்க சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2024 இல் திட்டம் தொடங்கப்பட்டதும், எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் தங்கள் புதுப்பித்தல் விண்ணப்பங்களை வெளியுறவுத் துறைக்கு அனுப்ப வேண்டும். விசா விண்ணப்ப செயல்முறையின் போது, ஊழியர்கள் வெளிநாட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த திட்டத்தின் மூலம், வெளிநாட்டு ஊழியர்களின் விசா புதுப்பித்தல் செயல்முறையை துரிதப்படுத்த முடியும் என அமெரிக்கா நம்புகிறது.