Loading...
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸிற்கு 4வது குழந்தை: 150 ஆண்டுகளில் புதிய வரலாற்று சாதனை
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸிற்கு 4வது குழந்தை

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸிற்கு 4வது குழந்தை: 150 ஆண்டுகளில் புதிய வரலாற்று சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Jul 20, 2026
01:38 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் தம்பதியருக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) காலை ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேரிலாந்தில் உள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவமனையில் இக்குழந்தை பிறந்துள்ளது. இதன் மூலம், அமெரிக்க வரலாற்றில் கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில், பதவியில் இருக்கும் போதே தந்தை ஆன முதல் அமெரிக்க துணை அதிபர் என்ற அரிய வரலாற்று சாதனையை ஜே.டி.வான்ஸ் தற்பொழுது படைத்துள்ளார். இக்குழந்தைக்கு அலெக் நீல் வான்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

மகிழ்ச்சி

சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியைப் பகிர்ந்த தம்பதி

தங்களுக்குக் குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியான செய்தியை இந்தத் தம்பதியினர் தங்களது சமூக வலைதளப் பக்கங்கள் வாயிலாக அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளனர்.

"எங்களது நான்காவது குழந்தை அலெக் நீல் வென்ஸ் பிறந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

உஷாவும் குழந்தையும் தற்பொழுது முழு ஆரோக்கியத்துடன் நலமாக உள்ளனர். எங்களது மற்ற குழந்தைகள் தங்களது குட்டித் தம்பியை சந்திக்கப் பெரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்." என்று அவர்கள் தங்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், தங்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்த வெள்ளை மாளிகை மருத்துவக் குழுவினருக்கும், ராணுவ மருத்துவர்களுக்கும் அவர்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

1870

1870 ஆம் ஆண்டிற்குப் பிறகு நிகழ்ந்துள்ள அற்புதம்

அமெரிக்க அரசியல் வரலாற்றில் இது போன்ற ஒரு நிகழ்வு நடப்பது மிகவும் அரிதான ஒன்றாகும்.

இதற்கு முன்பு கடந்த 1870 ஆம் ஆண்டு அதிபர் உலிசிஸ் எஸ்.கிராண்ட் ஆட்சிக் காலத்தில், அப்போதைய துணை அதிபராக இருந்த ஸ்காய்லர் கொல்ஃபாக்ஸ் என்பவருக்குப் பதவியில் இருந்த போது குழந்தை பிறந்தது.

அதற்கு முன்பாக 1829ல் ஜான் சி.கால்ஹூன் என்ற துணை அதிபருக்குக் குழந்தை பிறந்தது.

நவீன கால அமெரிக்கத் துணை அதிபர்கள் அனைவரும் தங்களது நடுத்தர அல்லது முதிய வயதிலேயே பதவிக்கு வருவதால் இந்த நீண்ட இடைவெளி ஏற்பட்டுள்ளது.

ஆனால் வான்ஸ் 2025 ஜனவரியில் தனது 40 வயதிலேயே துணை அதிபரானார்.

ADVERTISEMENT

இந்திய பாரம்பரியம்

குழந்தையின் பெயரில் ஒலிக்கும் இந்தியப் பாரம்பரியம்

புதிதாகப் பிறந்துள்ள இந்த ஆண் குழந்தையின் நடுப் பெயரான நீல் என்பது சமஸ்கிருத மொழியை மூலமாகக் கொண்டது என்பதால் உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

சமஸ்கிருதத்தில் நீல் என்றால் நீலம் என்று பொருளாகும். இது ஜே.டி.வான்ஸின் மனைவியான உஷா வான்ஸின் இந்தியப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நோக்கில் வைக்கப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தியர்களின் மகளான உஷா பாலா சிலுகுரி, யேல் சட்டப் பள்ளியில் படிக்கும் போது வான்ஸை சந்தித்து, கடந்த 2014ல் இந்து மற்றும் கத்தோலிக்க மதச் சடங்குகளின்படி இவரைத் திருமணம் செய்து கொண்டார்.

ADVERTISEMENT

குடும்பம்

வான்ஸின் சுவாரஸ்யமான குடும்பப் பின்னணி

புதிதாகப் பிறந்துள்ள அலெக் நீல் வென்ஸையும் சேர்த்து தற்பொழுது இக்குடும்பத்தில் மொத்தம் நான்கு குழந்தைகள் உள்ளனர்.

இவர்களுக்கு ஏற்கனவே ஈவான் (9) விவேக் (6) ஆகிய இரு மகன்களும், மிராபெல் (4) என்ற ஒரு மகளும் உள்ளனர்.

இவர்களில் விவேக் என்பதும் சமஸ்கிருதப் பெயராகும்.

முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் வான்ஸ் பேசும் போது, "நான் நான்காவது குழந்தை வேண்டும் எனக் கேட்ட போது, ஒன்று நீங்கள் அமெரிக்கத் துணை அதிபர் ஆகலாம், இல்லையெனில் நான்காவது குழந்தைபெற்றுக்கொள்ளலாம், ஆனால் இரண்டும் ஒன்றாக முடியாது என உஷா கூறினார்.

ஆனால் எனக்குப் பிடித்ததை சாதிப்பதில் நான் கெட்டிக்காரன், இன்று எனக்கு இரண்டுமே கிடைத்துவிட்டது." எனச் சுவாரஸ்யமாகக் குறிப்பிட்டிருந்தார்.

ADVERTISEMENT