டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த 217 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் விக்னேஷ் நடவடிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ. 10 வசூலித்ததாக வந்த புகார்களை தொடர்ந்து, மொத்தம் 217 பணியாளர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க லஞ்ச ஒழிப்புத் துறையும், டாஸ்மாக் நிர்வாகமும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதில் நேற்று மட்டும் 67 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 150 பணியாளர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்துள்ளது.
முறைகேடு
ஊதிய உயர்வு அளித்தும் தொடரும் முறைகேடு
டாஸ்மாக் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அண்மையில் தமிழக அரசு தரப்பில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது.
ஊதிய உயர்வு அளிக்கப்பட்ட போதிலும், பல கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலிப்பது தொடர்வதாக பொதுமக்கள் மற்றும் குடிமகன்களிடம் இருந்து அதிக அளவில் புகார்கள் எழுந்தன.
இதனை தொடர்ந்தே நிர்வாகம் இந்த கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அரசு நிர்ணயித்த விலையை விட ஒரு ரூபாய் கூடுதலாகக் கேட்டாலும் பொதுமக்கள் உடனடியாக டாஸ்மாக் நிர்வாகத்திற்குப் புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மண்டல மேலாளர்கள் டாஸ்மாக் கடைகளில் திடீர் தணிக்கை மேற்கொண்டு, முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.