இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ ராஜினாமா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு நிராகரிப்பு மற்றும் தவெக விளக்க பின்னணி
செய்தி முன்னோட்டம்
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அம்பாசமுத்திரம் முன்னாள் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா, தனது ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறக் கோரி தாக்கல் செய்த கூடுதல் மனுவை சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் ஏற்க மறுத்து வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. இசக்கி சுப்பையா சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், சபாநாயகர் அதனை ஏற்றுக்கொண்டு அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவித்தார். எனினும், இந்த ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றதை எதிர்த்து அதிமுக தரப்பில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நடவடிக்கை
நீதிமன்றத்தின் நடவடிக்கையும், இசக்கி சுப்பையாவின் விளக்கமும்
வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில், மக்கள் பணிகளைத் தொடரத் தன்னை மீண்டும் எம்.எல்.ஏ-வாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் அல்லது ராஜினாமாவை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என இசக்கி சுப்பையா தரப்பில் கோரப்பட்டது.
ஆனால், இந்த விவகாரத்தில் ராஜினாமாவைத் திரும்பப் பெறச் சட்டப்பிரிவுகளில் இடமில்லை என்றும் இடைத்தேர்தலே தீர்வு என்றும் கூறி உயர் நீதிமன்றம் மனுவை நிராகரித்தது.
இந்த சட்டப் போராட்டங்கள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்த இசக்கி சுப்பையா, தான் எவ்வித வற்புறுத்தலுமின்றி சுயநினைவோடுதான் ராஜினாமா கடிதத்தை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
தகுதிநீக்கம் செய்வதை விடத் தானாக முன்வந்து ராஜினாமா செய்வதே சிறந்தது எனக் கருதி முடிவெடுத்ததாகவும், அம்பாசமுத்திரம் தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே மீண்டும் பணியாற்ற அனுமதி கோரியதாகவும் கூறினார்.
மனக்கசப்பு
ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி
தவெக-வுடன் மனக்கசப்பு ஏற்பட்டதால் தான் அவர் மீண்டும் பதவி பெற முயல்வதாக வெளியான தகவல்களை இசக்கி சுப்பையா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
தவெகவில் தமக்கு எந்தவித அதிருப்தியும் இல்லை என்றும், கட்சித் தலைமை யாருக்கு வாய்ப்பளித்தாலும் தவெகவின் வெற்றிக்கு தீவிரமாக பணியாற்றப் போவதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் தவெக நிச்சயம் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்றும், கட்சித் தலைமையின் மீது தமக்கு முழு நம்பிக்கை உள்ளதாகவும் கூறி அனைத்து ஊகங்களுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.