பண்டிகைக் காலத்தில் விமானக் கட்டணம் உயரும் அபாயம்; விமான எரிபொருள் விலை லிட்டருக்கு ₹6.28 அதிகரிப்பு
செய்தி முன்னோட்டம்
வரவிருக்கும் பண்டிகை கால பயணங்களுக்கு முன்னதாக, இந்தியாவில் விமானக் கட்டணங்கள் கணிசமாக உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கான விமான எரிபொருள் விலை தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் கார்பரேஷன் (IOCL) தகவல்களின்படி, ஏடிஎஃப் (ATF) விலை 5.46% உயர்ந்துள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய விலை நிலவரப்படி, ₹115.00 / லிட்டர் என இருந்த விமான எரிபொருள் (ATF) விலை ₹121.28 / லிட்டராக அதிகரித்துள்ளது. அதாவது ₹6.28 (5.46%) விலை அதிகரித்துள்ளது.
தாக்கம்
விமான நிறுவனங்கள் மற்றும் பயணிகள் மீதான தாக்கம்
விமான நிறுவனங்களின் மொத்த இயக்கச் செலவில் 40% வரை எரிபொருளுக்காகவே செலவிடப்படுவதால், இந்த விலை உயர்வு நிறுவனங்களுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும்.
ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் வரவுள்ள நிலையில், பயணிகளின் தேவை அதிகரிக்கும் என்பதால் விமான நிறுவனங்கள் இந்தக் கூடுதல் செலவைப் பயணிகள் மீது சுமத்த வாய்ப்புள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரம், ரூபாய் மதிப்பு மாற்றம் மற்றும் வரவிருக்கும் தேவை ஆகியவற்றை பொறுத்தே இனி விமான கட்டணங்களின் மாற்றங்கள் அமையும் எனக் கருதுகின்றனர்.