கோவில்களில் செல்போன் தடை: இவர்களுக்கு மட்டும் சிறப்பு விலக்கு என அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையில் கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தை வைத்திருப்போர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு விலக்கு அளிக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படக் கூடாது என்பதில் அரசு கவனமாக இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், பின்வரும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் வருபவர்கள், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வரும் போது அவர்களிடம் இருந்து கட்டாயமாக மொபைல் போன்களை வாங்கி வைக்க வேண்டிய அவசியமில்லை. கேமரா வசதி இல்லாத சாதாரண மொபைல் போன்களை கோவிலுக்குள் கொண்டு செல்ல எவ்வித தடையும் இல்லை.
உயர்நீதிமன்றத் தீர்ப்பு
உயர்நீதிமன்றத் தீர்ப்பும், கோவில் கட்டுப்பாடுகளும்
அமைச்சர் ரமேஷ் மேலும் கூறுகையில், "கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழங்கிய உத்தரவின் அடிப்படையிலேயே தமிழகத்தில் உள்ள கோவில்களில் செல்போன் தடை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது".
"திருச்செந்தூர், பழனி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ராமேஸ்வரம், வடபழனி, திருத்தணி உள்ளிட்ட 52 முக்கிய கோவில்களில் இக்கட்டுப்பாடு அமலில் உள்ளது".
"பக்தர்கள் தங்கள் கைபேசிகளைப் பாதுகாப்பாக வைக்க ரூ. 5 கட்டணத்தில் பாதுகாப்பு பெட்டக வசதியும் டோக்கன் முறையும் நடைமுறையில் உள்ளது".
கட்டணம்
ரூ. 5 கட்டணம் குறித்து விளக்கம்
செல்போன்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு வசூலிக்கப்படும் ரூ. 5 கட்டணம் குறித்து எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அமைச்சர், "இந்தக் கட்டணம் மூலமாகக் கிடைக்கும் வருவாய் முழுவதும் கோவில் ஊழியர்களின் சம்பளம், பராமரிப்புச் செலவுகள் மற்றும் ஏழை எளிய பக்தர்களுக்கான அன்னதானத் திட்டத்திற்கே முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது".
"பக்தர்கள் நிஜமாகவே சிரமப்பட்டால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை அரசு நிச்சயம் செய்யும்" என்று உறுதியளித்துள்ளார்.