அமெரிக்கா -UAE உறவில் விரிசல்? ராணுவத் தளங்களை மூட அமீரகத்தில் கோரிக்கை
செய்தி முன்னோட்டம்
மேற்கு ஆசியாவில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் தீவிர போரைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின்(UAE) பாதுகாப்பு வியூகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அந்த நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை மூடுவது குறித்த விவாதம் அங்குள்ள கொள்கை வகுப்பாளர்களிடையே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. UAE-ன் பிரபல அரசியல் விமர்சகர் அப்துல்காலிக் அப்துல்லா, எக்ஸ்(X) தளத்தில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. சமீபத்திய ஈரான் தாக்குதல்களின் போது, UAE தனது சொந்த பாதுகாப்பு அமைப்புகள் மூலம் ஈரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியுள்ளது. இது "தன்னை பாதுகாத்து கொள்ள அமீரகத்திற்கு திறன் உள்ளது" என்பதை நிரூபித்துள்ளதாக அவர் கூறுகிறார்.
சுமை
அமெரிக்க தளங்கள் சுமை எனக்கருதும் வல்லுநர்
அமெரிக்க ராணுவ தளங்கள் இனி அமீரகத்திற்குத் தேவையான "மூலோபாய சொத்துக்கள்" அல்ல, மாறாக அவை ஒரு "சுமையாக" மாறிவிட்டன என அவர் வாதிடுகிறார். அமீரகத்திற்கு அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் தேவையில்லை, அதற்குப் பதிலாக அமெரிக்காவிடமிருந்து நவீன மற்றும் மேம்பட்ட ஆயுதத் தொழில்நுட்பங்கள் மட்டுமே தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவாதத்திற்கு முக்கியக் காரணம், போரின் போது அமீரகத்தில் உள்ள அமெரிக்கத் தொடர்பு கொண்ட இடங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்கள் ஆகும். பெரும்பாலான ஏவுகணைகளை அமீரகம் தடுத்து நிறுத்தினாலும், அதன் சிதறல்கள் சில பொதுமக்களுக்கும் சொத்துக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தின. அமீரகத்தின் இந்த அதிரடிப் போக்கு, அமெரிக்காவுடனான அதன் நீண்டகால உறவில் ஒரு விரிசலை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.