Loading...
2 லட்சம் பேரின் விசாக்களை ரத்து செய்ய ட்ரம்ப் அரசு முடிவு
அமெரிக்க வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய விசா ரத்தாக இது அமையும்

2 லட்சம் பேரின் விசாக்களை ரத்து செய்ய ட்ரம்ப் அரசு முடிவு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 25, 2026
07:47 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் புகலிடம் கேட்டு விண்ணப்பித்துள்ள அல்லது அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுமார் 2,00,000 வெளிநாட்டினரின் பிசினஸ் (B1) மற்றும் சுற்றுலா (B2) விசாக்களை ரத்து செய்ய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் ஆயத்தமாகி வருகிறது. இந்த நடவடிக்கை அமலுக்கு வந்தால், அமெரிக்க வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய விசா ரத்தாக இது அமையும். 2016 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட B1 (தொழில்முறை பயணம்) மற்றும் B2 (சுற்றுலா, குடும்ப வருகை, மருத்துவக் காரணம்) விசாக்களை வைத்துக்கொண்டு, அமெரிக்காவிற்குள் நுழைந்த பின் புகலிடம் கோரிய வெளிநாட்டினரை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகம், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையுடன் இணைந்து இதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

நடவடிக்கை

ட்ரம்ப் நிர்வாகத்தின் கடுமையான நிலைப்பாடு

விசாக்கள் ரத்து செய்யப்பட்டாலும், நிலுவையில் உள்ள புகலிடக் கோரிக்கைகளைக் கொண்ட நபர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட மாட்டார்கள்.

மாறாக, அவர்கள் சுற்றுலா அல்லது வணிகப் பயணிகள் என்ற நிலையிலிருந்து அகற்றப்பட்டு, வேறு விதமான குடிவரவு பிரிவின் கீழ் மறுவகைப்படுத்தப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சுற்றுலா விசாக்களைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைந்துவிட்டு, பின்னர் புகலிடக் கோரிக்கைகளை ஒரு "சட்ட விரோத வழியாக" பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என வெளியுறவுத்துறை துணை அமைச்சர் கிறிஸ்டோபர் லண்டாவ் தெரிவித்துள்ளார்.

கடந்த 18 மாதங்களில் மட்டும் பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் கொள்கை எதிர்ப்புகள் காரணமாக சுமார் 1.75 லட்சம் விசாக்களை அமெரிக்கா ஏற்கனவே ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வாரங்களில் வெளியாகக்கூடும்.

ADVERTISEMENT