மீண்டும் இறுகும் H-1B விசா தணிக்கை: அமெரிக்கா வெளியுறவுத் துறை புதிய உத்தரவு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவுக்கு வேலை நிமித்தமாக வரும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வழங்கப்படும் மிகவும் பிரபலமான விசா வகையான H-1B விசா விண்ணப்பதாரர்களை, அமெரிக்க வெளியுறவுத் துறை (US State Department) தற்போது புதிய கண்ணோட்டத்தில் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது. 'தணிக்கை' (Censorship) மற்றும் மனித உரிமைகள் மீறல் போன்ற நடவடிக்கைகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்ட நிறுவனங்களுடன் தொடர்புடைய H-1B விசா விண்ணப்பதாரர்களை குறிவைத்து இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை, H-1B விசா விண்ணப்பதாரர்களின் LinkedIn பக்கங்கள் மற்றும் விண்ணப்பங்களை மதிப்பாய்வு செய்ய தொடங்குமாறு அதிகாரிகளை உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் பாதுகாக்கப்பட்ட பேச்சுத் தணிக்கை என்று வாஷிங்டன் அழைப்பதில் தொடர்புடைய எவருக்கும் நுழைவு மறுக்கப்படலாம் என்று எச்சரித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பின்னணி
எதற்காக இந்த திடீர் தணிக்கை?
வெளிநாடுகளில் உள்ள அரசாங்கங்கள் அல்லது அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படும் தகவல் ஒடுக்குமுறை அல்லது இணைய தணிக்கை போன்ற செயல்பாடுகளுக்கு உதவக்கூடிய பணியாளர்களுக்கு விசா வழங்குவதை தடுப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். இது வெறுமனே அரசாங்கத்தின் தணிக்கை நடவடிக்கைகளுக்கு மட்டுமல்லாமல், உலகளாவிய மனித உரிமை கவலைகள் மற்றும் ஒடுக்குமுறையுடன் தொடர்புடைய பணியாளர்களையும் அமெரிக்க மண்ணுக்குள் அனுமதிப்பதை தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
விளைவு
விண்ணப்பதாரர்களுக்கு என்னவாகும்?
இந்த ஆய்வு நடவடிக்கையானது, H-1B விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மேலும் ஒரு அடுக்குச் சோதனையாக அமையும். விண்ணப்பதாரர்கள் அல்லது அவர்களுடன் வரும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்துதல், தவறான தகவல் கண்காணிப்பு, தவறான தகவல் ஆராய்ச்சி, உண்மை சரிபார்ப்பு, இணக்கம் அல்லது ஆன்லைன் பாதுகாப்பு போன்ற துறைகளில் பணியாற்றியுள்ளார்களா என்பதை தூதரக அதிகாரிகள் ஆராய வேண்டும். விண்ணப்பதாரர் பணிபுரியும் நிறுவனம் அல்லது முந்தைய வேலையிடங்கள், ஏதேனும் வெளிநாட்டுக் கொள்கைத் தடைகள் அல்லது தணிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறதா என்பது குறித்து விசா அதிகாரிகள் விரிவான கேள்விகளை எழுப்பக்கூடும். வெளிப்படையான மற்றும் சுதந்திரமான தகவல் பரிமாற்றத்தைப் பாதுகாக்கும் அமெரிக்காவின் கொள்கைகளுக்கு முரணான பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம்.