6-வது நாளாக நீடிக்கும் அமெரிக்காவின் குண்டுமழை; ஈரானின் முக்கிய துறைமுகங்கள் காலி
செய்தி முன்னோட்டம்
ஈரான் மீதான தனது வான்வழித் தாக்குதலை அமெரிக்கா தொடர்ந்து ஆறாவது நாளாக தீவிரப்படுத்தியுள்ளது. இந்த கடுமையான இராணுவ நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், வாஷிங்டனுடன் ஒரு சுமுகமான உடன்பாட்டை எட்டவே ஈரான் விரும்புவதாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் இன்னும் திறந்தே இருப்பதாகவும் அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. CENTCOM தகவலின்படி, ஈரானின் இராணுவப் பலத்தை முற்றிலுமாக முடக்கும் நோக்கில் இந்த புதிய அலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஈரானின் மிக முக்கிய வணிக மற்றும் கடற்படை மையமான தெற்குப் பகுதி துறைமுக நகரான பண்டார் அபாஸ் மற்றும் கெஷ்ம் தீவு ஆகிய பகுதிகளில் அமெரிக்க ஏவுகணைகள் மிகக் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஈரான்
உடன்படிக்கைக்கு தயாராகும் ஈரான்
தாக்குதல்கள் ஒருபுறம் தீவிரமடைந்தாலும், ஈரான் தரப்பு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வம் காட்டி வருவதாக வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராணுவத்தின் தொடர் தாக்குதலால் ஈரான் நிலைகுலைந்துள்ளதே இதற்கு காரணம் என்றும், ஹார்முஸ் நீரிணையில் வணிக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
அமெரிக்கா, ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ளதால், சர்வதேச எரிசக்தி பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதுடன், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இருப்பினும், அதிபர் டொனால்ட் டிரம்ப் எப்போதும் ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராகவே இருக்கிறார் என்றும், அதே சமயம் ஈரானின் பயங்கரவாதச் செயல்களை அமெரிக்கா சும்மா வேடிக்கை பார்க்காது என்றும் வெள்ளை மாளிகை திட்டவட்டமாக எச்சரித்துள்ளது.