LOADING...
ஈரான் கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா: போர்நிறுத்தம் முடியும் முன் உச்சகட்ட பதற்றம்!
ஓமன் வளைகுடாவில் ஈரானின் சரக்கு கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா (Representative Image)

ஈரான் கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா: போர்நிறுத்தம் முடியும் முன் உச்சகட்ட பதற்றம்!

எழுதியவர் Venkatalakshmi V
Apr 20, 2026
06:58 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கில் நீடித்து வரும் அமெரிக்கா - ஈரான் போர் பதற்றத்தின் உச்சகட்டமாக, ஈரானின் சரக்கு கப்பல் ஒன்றை அமெரிக்கக் கடற்படை ஓமன் வளைகுடாவில் அதிரடியாக சிறைபிடித்துள்ளது. அமெரிக்கா விதித்துள்ள கடல்சார் முற்றுகையை மீற முயன்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்காவின் ஏவுகணை அழிப்புக் கப்பலான 'USS Spruance', ஈரானின் 'டூஸ்கா' என்ற பிரம்மாண்டக் கப்பலை நிறுத்துமாறு எச்சரித்தது. ஈரான் மாலுமிகள் கப்பலை நிறுத்த மறுத்ததால், அமெரிக்கக் கடற்படை அந்தக் கப்பலின் இன்ஜின் அறையை நோக்கிச் சுட்டுத் துளையிட்டது. இதன் மூலம் கப்பல் நடுவழியில் முடக்கப்பட்டது.

எச்சரிக்கை

ஈரான் கடும் எச்சரிக்கை: "இது கடல் கொள்ளை" எனக்கண்டனம்

சுமார் 900 அடி நீளம் கொண்ட இந்த ராட்சதக் கப்பல் தற்போது அமெரிக்கக் கடற்படையின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது. கப்பலில் என்னென்ன பொருட்கள் உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரானிய ராணுவத்தின் மத்திய கட்டளை மையமான 'காதம் அல்-அன்பியா' விடுத்துள்ள அறிக்கையில்,"அமெரிக்காவின் இந்த ஆயுதமேந்திய கடல் கொள்ளைக்கு எதிராக ஈரான் இஸ்லாமியக் குடியரசின் படைகள் மிக விரைவில் தகுந்த பதிலடி கொடுக்கும்." என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பிராந்தியத்தில் ஒரு நேரடி மோதலுக்கான வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தையில் நிலவும் முட்டுக்கட்டை

ஏப்ரல் 22-ம் தேதியுடன் தற்காலிகப் போர்நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இந்தக் கப்பல் சிறைபிடிப்பு சம்பவம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கப் பிரதிநிதிகள் இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் செல்வதாக டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், ஈரான் தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வரவில்லை. ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கப்போவதாக முன்னர் அறிவித்திருந்த ஈரான், அமெரிக்காவின் கடல்சார் முற்றுகைக்கு போட்டியாக மீண்டும் அந்த ஜலசந்தியை மூடுவதாக அறிவித்துள்ளது. பிடிபட்டுள்ள 'டூஸ்கா' கப்பல் ஏற்கனவே அமெரிக்காவின் பொருளாதாரத் தடையில் இருந்த ஒரு கப்பலாகும். இந்தக் கப்பல் ஒரு விமானம் தாங்கிக் கப்பலுக்கு இணையான எடையைக் கொண்டது என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement