'ரஷ்ய-உக்ரைன் போரை நிறுத்துவதற்கான திறன் இந்தியாவுக்கு இருக்கிறது': அமெரிக்கா
ரஷ்ய-உக்ரைன் போரை நிறுத்துவதற்கான திறன் இந்தியாவுக்கு இருக்கிறது என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் இன்று தெரிவித்தார். உக்ரைனுடனான போரை நிறுத்துமாறு அதிபர் விளாடிமிர் புதினிடம் வலியுறுத்தும் அளவுக்கு ரஷ்ய-இந்திய உருவு இருக்கிறது என்று கரீன் ஜீன்-பியர் தெரிவித்துள்ளார். 2 நாள் பயணமாக பிரதமர் கடந்த திங்கள்கிழமை ரஷ்யாவுக்கு சென்றார். அப்போது ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த அவர், போரில் அப்பாவி குழந்தைகள் உயிரிழப்பது இதயத்தை உலுக்குவதாகவும், மிகுந்த வேதனை அளிப்பதாகவும் உள்ளது என்று ரஷ்ய அதிபரிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமெரிக்க செய்தி தொடர்பாளர் ஒருவர் இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார்.
'போரைப் பற்றி திறந்த மனதுடன் விவாதித்தோம்': பிரதமர் மோடி
"போரோ, மோதல்களோ, பயங்கரவாத தாக்குதல்களோ எதுவாக இருந்தாலும், மனிதநேயத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் உயிர் பலி ஏற்படும் போது வேதனை அடைகிறார்கள். அப்பாவி குழந்தைகள் கொல்லப்படும்போது, அப்பாவி குழந்தைகள் இறப்பதைப் பார்க்கும்போது, மனதைக் கனக்கச் செய்கிறது, அந்த வலி மிக பெரியது. இதுபற்றி நான் ஏற்கனவே உங்களுடன் விவாதித்திருக்கிறேன்,'' என்று பிரதமர் மோடி நேற்று அதிபர் புதினிடம் கூறினார். "உக்ரைனில் நடந்த போரைப் பற்றி திறந்த மனதுடன் விவாதிக்க முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் போரைப் பற்றிய கருத்துக்களை நாங்கள் மிகவும் மரியாதையுடன் பகிர்ந்துகொண்டோம்" என்றும் பிரதமர் மோடி கூறியிருந்தார்.