Loading...
ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி: 2 மும்பை நிறுவனங்கள் மற்றும் 5 இந்தியர்களுக்கு அமெரிக்கா தடை
இரு இந்திய நிறுவனங்கள் மற்றும் ஐந்து இந்திய குடிமக்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி: 2 மும்பை நிறுவனங்கள் மற்றும் 5 இந்தியர்களுக்கு அமெரிக்கா தடை

எழுதியவர் Venkatalakshmi V
Oct 09, 2026
08:21 am

செய்தி முன்னோட்டம்

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை வர்த்தகம் செய்ய உதவியதாக மும்பையைச் சேர்ந்த இரு நிறுவனங்கள் மற்றும் ஐந்து இந்திய குடிமக்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மும்பையைச் சேர்ந்த எஸ்.எஸ்.பி.எல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் சமுத்ரா மெரைன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.பி.எல் நிறுவனத்துடன் தொடர்புடைய த்வனி வோரா, நிசர்க் வோரா ஆகிய இருவர் மீதும், சமுத்ரா மெரைன் நிறுவனத்துடன் தொடர்புடைய கேத்தன் கொச்சிகர், பூபேந்திரசிங் சாகு, ஹரிஷ்யாம் ஹரிஹரன் சூண்டாகட்டில் ஆகிய மூன்று இந்தியர்கள் மீதும் அமெரிக்க அரசு நேரடியாகத் தடை விதித்துள்ளது.

நடவடிக்கை

'ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்' நடவடிக்கை

ஈரானின் சட்டவிரோத எண்ணெய் வர்த்தகம் மூலம் கிடைக்கும் வருவாயை தடுப்பதற்காக அமெரிக்கா முன்னெடுத்து வரும் 'ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்' நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 10 நிறுவனங்கள், 6 தனிநபர்கள் மற்றும் 5 வணிகக் கப்பல்கள் மீது அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் மூலம் ஈரானிய அரசுக்கு செல்லும் பல மில்லியன் டாலர் நிதி ஆதாரம் துண்டிக்கப்படும் என அமெரிக்கா தெரிவிப்பதாக சர்வதேச தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கால அவகாசம்

அக்டோபர் 23 வரை கால அவகாசம்

சமுத்ரா மெரைன் சர்வீசஸ் நிறுவனம் தனது நிலுவையில் உள்ள பழைய வர்த்தக பரிவர்த்தனைகளை முடித்துக் கொண்டு வெளியேறுவதற்காக வரும் அக்டோபர் 23 ஆம் தேதி வரை அமெரிக்க அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது.

ஈரான் தனது போருக்கான நிதி ஆதாரங்களை திரட்டுவதைத் தடுப்பதே இதன் நோக்கம் என்றும், தடைகளை மீற உதவும் எந்தவொரு அமைப்பும் அமெரிக்காவின் நடவடிக்கையிலிருந்து தப்ப முடியாது என்றும் அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார்.

ADVERTISEMENT