
UNSCயின் நிரந்தர உறுப்பினர் தகுதியை இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என்ற எலான் மஸ்க்கின் கருத்துகளுக்கு அமெரிக்கா பதில்
செய்தி முன்னோட்டம்
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் (யுஎன்எஸ்சி) உள்ளிட்ட ஐக்கிய நாடுகளின் நிறுவனங்களில் சீர்திருத்தம் செய்ய அமெரிக்கா ஆதரவை வழங்கியுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் புதன்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
UNSCயில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் இல்லை என்பது குறித்து டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் கூறிய கருத்துக்கள் குறித்து கேட்டபோது, வேதாந்த் படேல், "அதிபர் ஐ.நா. பொதுச் சபையில் இதுபற்றி முன்னரே பேசியிருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.
"நாம் வாழும் 21 ஆம் நூற்றாண்டின் உலகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பாதுகாப்பு கவுன்சில் உட்பட ஐ.நா. அமைப்புக்கான சீர்திருத்தங்களை நாங்கள் நிச்சயமாக ஆதரிக்கிறோம்." என்று அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா
"இந்தியாவுக்கு நிரந்தர இடம் இல்லாதது 'அபத்தமானது'": எலான் மஸ்க்
"அந்த முயற்சிகள் என்ன என்பது குறித்து என்னிடம் எந்த விவரமும் இல்லை, ஆனால் நிச்சயமாக நாங்கள் அதை அங்கீகரிக்கிறோம். சீர்திருத்தம் தேவை." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு நிரந்தர இடம் இல்லாதது 'அபத்தமானது' என்று கடந்த ஜனவரி மாதம் எலான் மஸ்க் கூறியிருந்தார்.
"ஒரு கட்டத்தில், ஐ.நா அமைப்புகளில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். பிரச்சனை என்னவென்றால், அதிகப்படியான அதிகாரம் உள்ளவர்கள் அதை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தாலும், பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் இல்லை. இது அபத்தமானது. ஆப்பிரிக்காவுக்கும் கூட்டாக நிரந்தர இருக்கை கொடுக்கப்பட வேண்டும்" என்று எலான் மஸ்க் அப்போது கூறியிருந்தார்.