LOADING...
IRGC தலைமையகம் மீது அமெரிக்கா தாக்குதல்: ஈரான் ராணுவக் கட்டமைப்பு நிலைகுலைந்தது
IRGC-இன் தலைமையகத்தை ஏவுகணை தாக்குதல் மூலம் முழுமையாக அழித்துள்ளது அமெரிக்கா

IRGC தலைமையகம் மீது அமெரிக்கா தாக்குதல்: ஈரான் ராணுவக் கட்டமைப்பு நிலைகுலைந்தது

எழுதியவர் Venkatalakshmi V
Mar 02, 2026
09:02 am

செய்தி முன்னோட்டம்

ஈரான் மீதான தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள அமெரிக்கா, இன்று தலைநகர் டெஹ்ரானில் உள்ள அந்நாட்டின் மிக முக்கிய ராணுவப் பிரிவான IRGC-இன் தலைமையகத்தை ஏவுகணை தாக்குதல் மூலம் முழுமையாக அழித்துள்ளது. அமெரிக்க மத்திய கட்டளை அலுவலகம் (Centcom) வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "கடந்த 47 ஆண்டுகளில் 1,000-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களை IRGC கொன்றுள்ளது. நேற்று நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் மூலம் 'பாம்பின் தலை' துண்டிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா உலகின் சக்திவாய்ந்த ராணுவத்தைக் கொண்டுள்ளது, இனி IRGC-க்கு தலைமையகம் கிடையாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ நடவடிக்கை

ஆபரேஷன் எபிக் ஃபியூரி

கடந்த சனிக்கிழமை முதல் அமெரிக்கா நடத்தி வரும் இந்த ராணுவ நடவடிக்கையில் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா உரிமை கோரியுள்ளது. இது தவிர, IRGC விண்வெளிப் படை தலைமையகம், ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்புகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் தளங்கள், ஈரானிய கடற்படைக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள், ராணுவத் தகவல் தொடர்பு மையங்கள் ஆகிய முக்கிய இடங்களும் குறிவைத்து தாக்கப்பட்டது.

பதிலடி

ஈரானின் பதிலடி

அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், இஸ்ரேலின் ஜெருசலேம் மற்றும் பெய் ஷமேஷ் பகுதிகளில் உள்ள யூத வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் "அமெரிக்கா ஃபர்ஸ்ட்" கொள்கையை தாண்டி, அதிபர் டிரம்ப் எடுத்துள்ள இந்த அதிரடி ராணுவ நடவடிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement