கலிபோர்னியாவில் சிதைக்கப்பட்ட இந்து கோயில்: இந்திய-அமெரிக்க எம்பிக்கள் கண்டனம்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இந்துக்கோயில் சிதைக்கப்பட்ட சம்பவத்தை, கடுமையாக கண்டித்துள்ள இந்திய-அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், இதில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். கலிபோர்னியாவின் நெவார்க்கில் உள்ள ஸ்ரீ ஸ்வாமிநாராயண் மந்திர் இந்து கோவில், இந்திய எதிர்ப்பு சுவர ஓவியங்களால் சிதைக்கப்பட்டது. மேலும், இது ஒரு வெறுப்பு குற்றமாக இருக்கலாம் என்ற ரூபத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகமும் இதனை கண்டித்து உள்ளது. சிலிக்கான் வேலியில் அமைந்துள்ள கலிபோர்னியாவின் 17வது காங்கிரஸ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் காங்கிரஸ் உறுப்பினர் ரோ கன்னா, "தனது மாவட்டத்தில் உள்ள கலிபோர்னியாவின் நெவார்க்கில் உள்ள சுவாமிநாராயண் கோவில் "அழிவுபடுத்தப்பட்டதை" வன்மையாக கண்டிப்பதாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சம்பவத்திற்கு விசாரணை கோரும் எம்பிக்கள்
மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான ராஜா கிருஷ்ணமூர்த்தி, ஸ்வாமிநாராயண் கோயில் சிதைக்கப்பட்டது " இழிவான" செயலென கண்டித்துள்ளார். இல்லினாய்ஸ் 8வது காங்கிரஸ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ராஜா, கோயில் சிதைக்கப்பட்டதற்கு எதிராக மக்கள் திரள்வது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். மற்றொரு இந்திய-அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்ரீ தானேதர், இந்த தாக்குதலை "அவமானகரமான நாசகார செயல்" என கண்டித்துள்ளார். "இந்திய-எதிர்ப்பு சுவர் ஓவியத்தால் குறிக்கப்பட்ட இந்த அவமதிப்பு, நமது அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம் என்ற சாராம்சத்தையே தாக்குகிறது." என பதிவிட்டு இருந்தார். இவர், மிச்சிகனின் 13வது காங்கிரஸ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராவார்.
"மதவெறிக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டும்"
அமெரிக்கா மற்றும் கனடாவில் தொடர்ந்து சேதப்படுத்தப்படும் கோயில்கள்
அமெரிக்காவில் இந்து கோயில் சிதைக்கப்பட்டது தொடர்பாக, விசாரணை நடத்தப்படும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். கோவிலில் உள்ள ஒரு வழிகாட்டி பலகையில், "காலிஸ்தான்" என்ற சொல், சுவரோயும் மூலம் எழுதப்பட்டிருந்தது. இது தவிர பிற ஆட்சேபனைக்குரிய சொற்களும் எழுதப்பட்டிருந்ததை, அமெரிக்க எம்பிக்கள் பதிவிட்ட புகைப்படங்களிலிருந்து காண முடிகிறது. இந்தியாவில் தேடப்படும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கனடா மற்றும் அமெரிக்காவில் வாழ்ந்து வரும் நிலையில், இந்நாடுகளில் இந்து கோயில்கள் தொடர்ந்து இதுபோன்று சிதைக்கப்பட்டும், சேதப்படுத்தப்பட்டு வருகிறது.