அமெரிக்கா -ஈரான் இடையே மீண்டும் வெடித்தது போர்: வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்; கச்சா எண்ணெய் ஒப்பந்தம் ரத்து
செய்தி முன்னோட்டம்
ஹார்முஸ் நீரிணையில் பயணித்த மூன்று வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அதற்கு பதிலடியாக அமெரிக்க ராணுவம் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. இந்தத் திடீர் ராணுவ நடவடிக்கையால் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த மாதம் எட்டப்பட்ட தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் முறியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதலைத் தொடர்ந்து, தென் ஈரானின் பல்வேறு பகுதிகளில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
பதிலடி
அமெரிக்காவின் 'பவர்ஃபுல்' பதிலடி
அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம், எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,"ஹார்முஸ் நீரிணையில் பயணித்த மூன்று வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தேவையற்ற மற்றும் ஆபத்தான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் மீது சக்திவாய்ந்த வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளோம். ஈரானின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை போர் நிறுத்த உடன்படிக்கையை அப்பட்டமாக மீறும் செயலாகும்" என்று குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் கிடைத்த தகவலின்படி, ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், கடற்கரை கண்காணிப்பு மையங்கள், மேற்பரப்பில் இருந்து வான்வெளி பாயும் ஏவுகணை தளங்கள், கப்பல் எதிர்ப்பு உந்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் ஏவுதளங்களை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
குண்டுவெடிப்பு
ஈரானில் குண்டுவெடிப்புச் சத்தம்
தென் ஈரானின் முக்கியப் துறைமுக நகரான சிரிக் பகுதியில் ஏழுக்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. அங்குள்ள வணிகப் பகுதியில் விழுந்த ஏவுகணை துகள்களால் சிலர் காயமடைந்துள்ளனர். இது தவிர, கெஷ்ம் தீவு மற்றும் பண்டார் அப்பாஸ் ஆகிய இடங்களிலும் வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன. இந்தத் தாக்குதலின் போது ஈராக் பயணத்தில் இருந்த ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் உடனடியாக தனது பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு தாயகம் திரும்பியுள்ளார்.
விற்பனை உரிமம்
கச்சா எண்ணெய் விற்பனை உரிமத்தை ரத்து செய்த அமெரிக்கா
கடந்த ஜூன் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான தற்காலிக ஒப்பந்தத்தின்படி, ஆகஸ்ட் 21 வரை கச்சா எண்ணெய் விற்க ஈரானுக்கு அமெரிக்க கருவூலம் 60 நாட்களுக்கு சிறப்பு உரிமம் மற்றும் தடைகளில் விலக்கு அளித்திருந்தது. ஆனால், கப்பல்கள் மீதான தாக்குதலை அடுத்து, ஈரானுக்கான கச்சா எண்ணெய் விற்பனை உரிமத்தை அமெரிக்கா உடனடியாக ரத்து செய்துள்ளது. "ஈரானின் இத்தகைய நடவடிக்கைகள் எற்றுக் கொள்ள முடியாதவை, இதற்கான விளைவுகளை அவர்கள் சந்தித்தே தீர வேண்டும்" என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காரணம்
மோதலுக்கான காரணம் என்ன?
உலக அளவில் வர்த்தகம் செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு இந்த ஹார்முஸ் நீரிணை வழியாகவே கடந்து செல்கிறது. அமைதிக்கான பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்தாலும், ஓமனின் எல்லைக்கு அருகிலுள்ள மாற்றுப் பாதையை பயன்படுத்தும் கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தன்வசமுள்ள பாதையை மட்டுமே கப்பல்கள் பயன்படுத்த வேண்டும் என ஈரான் வற்புறுத்துவதே இந்த மோதலுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தற்பொழுது அமெரிக்கா நடத்தியுள்ள இந்த தாக்குதலால், உலகக் கச்சா எண்ணெய் சந்தையில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.