அமெரிக்கா - இஸ்ரேல் இடையே வெடித்த மோதல்: "இஸ்ரேலின் ஒரே சக்திவாய்ந்த நட்பு நாடு நாங்கள் மட்டும்தான்"
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம், நீண்டகால நட்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே தற்பொழுது ஒரு பெரிய ராஜதந்திரப் போராக வெடித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்து வரும் இஸ்ரேலிய அமைச்சர்களுக்கு அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வென்ஸ் மிகவும் காரசாரமான முறையில் பதிலடி கொடுத்துள்ளார். வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜே.டி.வென்ஸ், இஸ்ரேலின் தற்போதைய பாதுகாப்பு நிலைப்பாடு மற்றும் அமெரிக்கா மீதான அவர்களின் விமர்சனங்களை அடுக்கடுக்கான சாடல்களுடன் நிராகரித்தார்.
டிரம்ப்
இஸ்ரேலின் ஒரே பலம் டிரம்ப் மட்டும்தான்: வென்ஸ்
"இஸ்ரேல் அரசுக்கு நான் கூற விரும்புவது இரண்டு விஷயங்களைத்தான். முதலாவதாக, இந்த உலகிலேயே இஸ்ரேல் நாட்டின் மீது தற்போது உண்மையான அனுதாபம் கொண்ட ஒரே உலகத் தலைவர் டொனால்ட் டிரம்ப் மட்டும்தான்". "நான் ஒருவேளை இஸ்ரேலிய அமைச்சரவையில் இருந்திருந்தால், இந்த உலகத்தில் எனக்கு எஞ்சியிருக்கும் ஒரே சக்திவாய்ந்த நட்பு நாட்டை (அமெரிக்காவை) இப்படித் தாக்கிப் பேசிக் கொண்டிருக்க மாட்டேன். இஸ்ரேலைப் பாதுகாக்கும் மூன்றில் இரண்டு பங்கு பாதுகாப்பு ஆயுதங்கள் அமெரிக்கக் கரங்களால் உருவாக்கப்பட்டு, அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்டவை என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்" என அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வென்ஸ் தெரிவித்தார்.
சாடல்
"எல்லோரையும் கொன்று குவிப்பதுதான் தீர்வாகாது"
மேலும், இஸ்ரேலிய அமைச்சர்களின் எதிர்ப்பை கேலி செய்த அவர்,"இஸ்ரேல் வெறும் 9 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஒரு சிறிய நாடு. உங்கள் தேசியப் பாதுகாப்புப் பிரச்சினைகள் ஒவ்வொன்றிற்கும் எல்லோரையும் கொன்று குவிப்பதுதான் தீர்வு என்று நீங்கள் நினைக்க முடியாது" என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடினார். ஈரானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி இறுதி கட்டத்தை எட்டும் போதெல்லாம், பெய்ரூட் நகரின் குடியிருப்புப் பகுதிகளில் இஸ்ரேல் நடத்தும் வான்வழித் தாக்குதல்கள் அமைதிப் பேச்சுவார்த்தையைச் சீர்குலைப்பதாக அதிபர் டிரம்ப் மிகுந்த அதிருப்தியில் உள்ளதாக வென்ஸ் குறிப்பிட்டார். லெபனானில் இஸ்ரேல் தனது எல்லையை மீறி அத்துமீறிச் செயல்படுவதை ஏற்க முடியாது என்றும், இரு தரப்பும் எல்லையில் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.
பதில்
இஸ்ரேல் அமைச்சரின் பதில்
ஜே.டி.வென்ஸின் இந்த விமர்சனத்திற்கு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென்-க்விர் தனது எக்ஸ் (X) தளத்தில் ஆவேசமாகப் பதிலளித்துள்ளார். "21-ஆம் நூற்றாண்டின் நாஜிக்களை (ஈரான்/ஹெஸ்பொல்லா) ஒடுக்க, 20-ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா எவ்வாறு நாஜிக்களைக் கையாண்டதோ அதே போன்ற கடுமையான ராணுவ நடவடிக்கைதான் தற்போதைய தேவை" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மோதல்களுக்கு மத்தியில், லெபனான், ஹெஸ்பொல்லா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் முழுமையான போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.