அமெரிக்கா -ஈரான் இடையே வார இறுதியில் அமைதி ஒப்பந்தம்? அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்
செய்தி முன்னோட்டம்
கடந்த பிப்ரவரி 28 முதல் நீடித்து வரும் அமெரிக்க- இஸ்ரேல்- ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை மிகவும் சாதகமான திசையை நோக்கி நகர்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் "மிகவும் சிறப்பாக" சென்று கொண்டிருப்பதாகவும், இந்த வார இறுதிக்குள்ளேயே இரு நாடுகளும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்புள்ளதாகவும் டிரம்ப் சூசகமாக அறிவித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி
உடனடியாக திறக்கப்படும் ஹார்முஸ் ஜலசந்தி
இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் மிக முக்கிய அம்சமாக, உலகளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியப் பாதையாக விளங்கும் 'ஹார்முஸ் ஜலசந்தி' உடனடியாகத் திறக்கப்படும் என டிரம்ப் உறுதியளித்துள்ளார். "ஈரான் நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான அடுத்த கணமே, ஹார்முஸ் ஜலசந்தி வணிகப் போக்குவரத்திற்காக உடனடியாகத் திறக்கப்படும். இதற்காக எங்களது கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள் ஏற்கனவே அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன" என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் போர் வெடித்ததைத் தொடர்ந்து, உலகளாவிய எண்ணெய் தேவையில் ஐந்தில் ஒரு பங்கு(20%) கடந்து செல்லும் இந்த முக்கிய கடல்வழிப் பாதையை ஈரான் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து முடக்கியது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இழுபறி
தொடரும் இழுபறியும், நிச்சயமற்ற தன்மையும்
டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தம் குறித்து மிகுந்த நம்பிக்கை தெரிவித்து, "ஈரான் ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்திட மிக நெருக்கமாக உள்ளது" என்று கூறினாலும், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து முரண்பட்ட தகவல்களே வருகின்றன. பேச்சுவார்த்தையில் பெரிய அளவில் இன்னும் முன்னேற்றம் ஏற்படவில்லை என ஈரான் தரப்பு மறுப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக, ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை அப்புறப்படுத்துவது மற்றும் லெபனான் விவகாரத்தை ஈரான் போருடன் இணைத்துப் பார்ப்பது போன்ற முக்கியப் புள்ளிகளில் இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் இறுதி உடன்பாடு எட்டப்படாததால், இந்த வார இறுதி ஒப்பந்தம் நிஜமாகுமா என்பதில் சர்வதேச அரசியல் அரங்கில் இன்னும் லேசான நிச்சயமற்ற தன்மை நீடிக்கிறது.