ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறப்பு: கப்பல்களுக்கு புதிய கட்டணம் விதிக்கும் ஈரான்?
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த நான்கு மாதங்களாக நீடித்து வந்த போர், ஒருவழியாக எட்டப்பட்டுள்ள அமைதி ஒப்பந்த உடன்படிக்கையின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, உலக வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணை மீண்டும் வணிகக் கப்பல் போக்குவரத்துக்காகத் திறக்கப்படும் என்று ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சுங்கக் கட்டணம்
சுங்கக் கட்டணம் இல்லை; சேவை வரி மட்டுமே: ஈரான் விளக்கம்
திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாஹி, ஹார்முஸ் நீரிணையைத் தாண்டிச் செல்லும் கப்பல்களுக்குச் சுங்கக் கட்டணம் ஏதும் விதிக்கப்படாது என்று தெளிவுபடுத்தியுள்ளார். அதற்குப் பதிலாக, சர்வதேச விதிகளின்படி கப்பல்களுக்கான வழிசெலுத்தல் சேவைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கப்பல் காப்பீடு மற்றும் பிற அத்தியாவசியத் தேவைகளுக்கான கடற்போக்குவரத்து சேவை கட்டணங்கள் மட்டுமே வசூலிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த கடல்சார் சேவைகளின் எதிர்கால நிர்வாகத்தை ஈரானும் ஓமனும் இணைந்தே தீர்மானிக்கும் என்பது ஒப்பந்தத்தின் இறுதி வரைவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
போர் இழப்பீடு
போர் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்ட அமெரிக்கா
கடந்த பிப்ரவரி 28 அன்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய கூட்டுத் தாக்குதலுக்குப் பிறகு, ஹார்முஸ் நீரிணை வணிகக் கப்பல்களுக்கு முற்றிலும் மூடப்பட்டது. தற்போதைய புதிய ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளும் தங்களின் ராணுவத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்திக் கொள்ள உடன்பட்டுள்ளன. "இந்த அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் பல பில்லியன் டாலர் நிதியை விடுவிக்கவும், போரினால் ஈரானுக்கு ஏற்பட்ட உள்கட்டமைப்பு சேதங்களுக்கு யுத்த இழப்பீடு வழங்கவும் அமெரிக்கத் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது." இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் வரும் ஜூன் 19, வெள்ளிக்கிழமை அன்று சுவிட்சர்லாந்தில் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தாக உள்ளது.
இஸ்ரேல்
ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு
மறுபுறம், இந்த அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் அரசு கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் இஸ்ரேலின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தல் என்று கூறியுள்ள அந்நாட்டின் தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் இதாமர் பென்-க்விர், "இந்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் கட்டுப்படாது" என்று அதிரடியாக அறிவித்துள்ளார். இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவர்களும் இது தங்கள் நாட்டின் பாதுகாப்பை ஆபத்தில் தள்ளும் ஒரு "ஆபத்தான திருப்பம்" என்று அமெரிக்காவைச் சாடியுள்ளனர்.