அமெரிக்கா -ஈரான் பேச்சுவார்த்தை திடீர் ரத்து: சுவிட்சர்லாந்தில் தொடங்கவிருந்த அமைதி மாநாட்டில் முட்டுக்கட்டை
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த வாரம் கையெழுத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க 14 அம்ச அமைதி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, சுவிட்சர்லாந்தில் வெள்ளிக்கிழமை தொடங்கவிருந்த உயர்மட்ட ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றம், வளைகுடா பிராந்தியத்தில் பல மாதங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் உலக நாடுகளின் முயற்சிக்கு புதிய முட்டுக்கட்டையையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் பர்கென்ஸ்டாக் மலைவாழிட ரிசார்ட்டில் திட்டமிடப்பட்டிருந்த இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறாது என்று சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வென்ஸ் சுவிட்சர்லாந்து மேற்கொள்ளவிருந்த தனது பயணத்தைத் தள்ளிவைத்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்த சில மணி நேரங்களிலேயே இந்தத் தகவல் வெளியானது.
பிண்ணனி
பேச்சுவார்த்தை முறிய பிண்ணனி என்ன?
இந்த அமைதி மாநாடு திடீரென ரத்து செய்யப்பட்டதற்குக் கப்பல் போக்குவரத்து மற்றும் தளவாட ஏற்பாடுகளில் நிலவும் சிக்கல்கள் ஒரு காரணமாகக் கூறப்பட்டாலும், இதன் பின்னணியில் பல முக்கிய ராஜதந்திரக் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஜெனிவாவில் ஒரு முறையான பொதுக் கையெழுத்து விழா நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் விரும்பினர். ஆனால், இரு நாட்டு அதிபர்களும் ஏற்கனவே மின்னணு முறையில் கையெழுத்திட்டுவிட்டதால், மீண்டும் ஒரு விழா தேவையில்லை என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகம் கேள்வி எழுப்பியது. அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைக்குப் புறம்பாக, லெபனானில் இஸ்ரேல் தனது ராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. லெபனானில் போர் நிறுத்தம் ஏற்படுவதுதான் பேச்சுவார்த்தை தொடர்வதற்கு அடுத்தகட்டம் என ஈரானியக் குழு பயணத்தை ரத்து செய்ததது.