அமெரிக்கா ரெடி..ஆனால் ஈரான் வருமா? இஸ்லாமாபாத் அமைதிப் பேச்சுவார்த்தையில் நீடிக்கும் மர்மம்
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்க, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள அமெரிக்கா -ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு இக்கட்டான சூழலை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த காலக்கெடுவிற்கு பிறகு எட்டப்பட்ட இந்தத் தற்காலிகப் போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்த இந்த பேச்சுவார்த்தை மிக அவசியமானதாக கருதப்படுகிறது. அமெரிக்கக் குழு தயாராக இருந்தாலும், ஈரானின் தயக்கம் இந்தப் பேச்சுவார்த்தையின் வெற்றியை ஒரு கேள்விக்குறியாக்கியுள்ளது. லெபனான் போர் நிறுத்தம் மற்றும் ஹார்முஸ் நீரிணை விவகாரங்களில் ஒருமித்த கருத்து எட்டப்படாத வரை, இஸ்லாமாபாத் சந்திப்பு முழுமை பெறாது என்றே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்
அமெரிக்கா
அமெரிக்க தூதுக்குழுவில் யார் யார்?
அமெரிக்கா தரப்பில் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தத் தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்குகிறார். முக்கிய உறுப்பினர்கள்: ட்ரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் மூத்த ஆலோசகர் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர். வாஷிங்டன் தனது தரப்பிலிருந்து உயர்மட்டக் குழுவை அனுப்பி, இந்த பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.
ஈரான்
ஈரானின் மர்மமான நிலைப்பாடு
ஈரான் தரப்பில் யார் பங்கேற்பார்கள் என்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது. முன்னதாக கூறப்பட்ட பெயர்கள்: ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி ஆகியோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஈரானின் மறுப்பு: ஆனால், ஈரானின் 'மெஹ்ர்' செய்தி நிறுவனம், தங்களது தூதுக்குழு இன்னும் இஸ்லாமாபாத் சென்றடையவில்லை என்றும், அத்தகைய செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்றும் தெரிவித்துள்ளது. நிபந்தனை: லெபனான் விவகாரத்தில் அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரையிலும், இஸ்ரேலின் தாக்குதல்கள் முழுமையாக நிற்கும் வரையிலும் பேச்சுவார்த்தைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஈரான் தரப்பு கூறுகிறது.