ஈரானுக்கு பணம் தருகிறதா அமெரிக்கா? அது பொய்யென டொனால்ட் டிரம்ப் ட்வீட்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே 4 மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முதற்கட்டப் போர்நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், அது குறித்து பரவி வரும் சில நிதியுதவித் தகவல்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அமெரிக்கா இந்த ஒப்பந்தத்திற்காக ஈரானுக்கு 300 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக வெளியான செய்திகளைத் தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகப் பக்கத்தில் சாடியுள்ள ட்ரம்ப், ஈரான் இனி எக்காலத்திலும் அணு ஆயுதம் தயாரிக்காது என்றும் பிரகடனப்படுத்தியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
"Iran has agreed to never have a Nuclear Weapon! Also, the story that the U.S. is paying Iran 300 million Dollars is Fake News, put out by the Dumocrats!!!" - President Donald J. Trump pic.twitter.com/Y9N9QWUqKm
— The White House (@WhiteHouse) June 15, 2026
மறுப்பு
"அமெரிக்கா பணம் தரவில்லை, அது பொய் செய்தி!": ட்ரம்ப் சாடல்
தனது அதிகாரப்பூர்வப் பதிவில் அதிபர் ட்ரம்ப்,"ஈரான் தன்னிடம் அணு ஆயுதம் எப்போதுமே இருக்காது என்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளது! அதைவிடுத்து, அமெரிக்கா ஈரானுக்கு 300 மில்லியன் டாலர்களை வழங்குகிறது என்று வெளியாகி வரும் கதைகள் அனைத்தும் டெமாக்ரட்டுகள் (Dumocrats) பரப்பும் முற்றிலும் பொய்யான செய்திகள் ஆகும்!" என்று பதிவிட்டுள்ளார். வளைகுடாப் பகுதியில் நிலவி வந்த தீவிர ராணுவ மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர இரு நாடுகளும் ஒரு பூர்வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதை உறுதி செய்துள்ள ட்ரம்ப், பிரான்சில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள நிலையில் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.
ஒப்பந்தம்
ஜெனீவாவில் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வக் கையெழுத்து
இந்த தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் வரும் ஜூன் 19 அன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தாக உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் அமெரிக்காவின் சார்பில் அந்நாட்டின் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் பங்கேற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் இந்த ஒப்பந்த வரைவை அங்கீகரித்துள்ளதுடன், "இது போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மிக முக்கியமான முதற்படி" என்று வர்ணித்துள்ளார். இருப்பினும், இது ஒரு தற்காலிகப் புரிந்துணர்வு மட்டுமே என்றும், நிரந்தரப் போர்நிறுத்தத்திற்கான இறுதி உடன்பாடு இன்னும் முழுமையாக இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.