உலகப்போரைத் தவிர்க்கும் ட்ரம்ப்? ஈரானுடன் திடீர் உடன்பாடு
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையான 'புராஜெக்ட் ஃப்ரீடம்' தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானுடன் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, தூதரக ரீதியிலான தீர்வுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) பகுதியில் சிக்கியுள்ள பல்வேறு நாடுகளின் வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக அமெரிக்க ராணுவத்தால் தொடங்கப்பட்ட திட்டமே "புராஜெக்ட் ஃப்ரீடம்" ஆகும்.
மனிதாபிமான நடவடிக்கை
புராஜெக்ட் ஃப்ரீடம்: ஒரு மனிதாபிமான நடவடிக்கை
போரில் தொடர்பில்லாத, உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தீர்ந்துபோகும் நிலையில் உள்ள கப்பல்களின் மாலுமிகளைக் காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டு இந்த மனிதாபிமான நடவடிக்கை வடிவமைக்கப்பட்டது. தற்போது இப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும், ஈரான் மீதான கடல்சார் முற்றுகை (Blockade) தொடர்ந்து அமலில் இருக்கும் என ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். பாகிஸ்தான் உள்ளிட்ட நட்பு நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த இடைக்காலத் தடையை விதித்துள்ளதாக ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் குறிப்பிட்டுள்ளார். "ஈரான் பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தை ஒரு முழுமையான மற்றும் இறுதிக்கட்ட ஒப்பந்தத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகுமா என்பதைப் பரிசோதிக்கவே குறுகிய காலத்திற்கு ராணுவ நகர்வுகள் நிறுத்தப்பட்டுள்ளன" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
“We have mutually agreed that, while the Blockade will remain in full force and effect, Project Freedom (The Movement of Ships through the Strait of Hormuz) will be paused for a short period of time to see whether or not the Agreement can be finalized and signed…” - President… pic.twitter.com/R9SlC4w68g
— The White House (@WhiteHouse) May 5, 2026
முற்றுகை
ஈரான் மீதான முற்றுகை தொடரும்
ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டாலும், ஈரானுக்கு எதிரான பொருளாதார மற்றும் கடல்சார் தடைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று வாஷிங்டன் உறுதிபடக் கூறியுள்ளது. ஈரானுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், மீண்டும் "புராஜெக்ட் ஃப்ரீடம்" முழு வீச்சில் செயல்படுத்தப்படும் என்றும் அமெரிக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பு சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் ஒருவித நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளின் அழுத்தத்திற்கு மத்தியில், அதிபர் ட்ரம்ப்பின் இந்த நகர்வு ஒரு புதிய அமைதி ஒப்பந்தத்திற்கு வழிவகுக்குமா என்பதை ஒட்டுமொத்த உலகமும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. ஈரானின் பதில் நடவடிக்கையைப் பொறுத்தே அடுத்தகட்ட முடிவுகள் அமையும்.