LOADING...
ஈரானுடன் நடப்பது போர் கணக்கில் வராது: அதிபர் டிரம்ப் பல்டி
ஈரான், அமெரிக்காவுடன் ஒரு உடன்படிக்கை செய்துகொள்ள ஏங்கிக் கொண்டிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்

ஈரானுடன் நடப்பது போர் கணக்கில் வராது: அதிபர் டிரம்ப் பல்டி

எழுதியவர் Venkatalakshmi V
May 01, 2026
09:27 am

செய்தி முன்னோட்டம்

சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இது ஒரு போர் அல்ல என்றும், ஈரானின் ராணுவக் கட்டமைப்பு முற்றிலும் சிதைக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படை அழிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாடு தற்போது அமெரிக்காவுடன் ஒரு உடன்படிக்கை செய்துகொள்ள ஏங்கிக் கொண்டிருப்பதாக அவர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முன்னதாக "நாம் இப்போது போரில் ஈடுபடவில்லை, அமைதிக்காகவே முயன்று வருகிறோம்" என்று சபாநாயகர் மைக் ஜான்சன் டிரம்ப்பிற்கு ஆதரவாகத் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சேதாரம்

ஈரான் ராணுவத்தின் தற்போதைய நிலை

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளின் தாக்கம் குறித்துப் பேசிய டிரம்ப், "ஈரான் ஒரு ஒப்பந்தம் செய்யத் துடிக்கிறது. அவர்களின் கடற்படை மற்றும் விமானப்படை இப்போது இல்லை. அவர்களின் ஒவ்வொரு தளவாடங்களும் நடைமுறையில் அழிக்கப்பட்டுவிட்டன," என்று கூறினார். ஈரானின் ட்ரோன் தொழிற்சாலைகள் 82% முடக்கப்பட்டுள்ளதாகவும், ஏவுகணை உற்பத்தி நிலையங்கள் 90% சரிவைச் சந்தித்துள்ளதாகவும் அவர் புள்ளிவிவரங்களை முன்வைத்தார். ஈரானின் அணுசக்தித் திறனை அமெரிக்கா "நிர்மூலமாக்கிவிட்டதாக" அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

நோபல் பரிசு

இந்தியா - பாகிஸ்தான் போரைத் தடுத்ததாக மீண்டும் பிதற்றல்

கடந்த காலங்களில் தான் தீர்த்து வைத்த எட்டுப் போர்கள் குறித்துப் பேசிய டிரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான அணுஆயுதப் போர் அபாயத்தை தான் தடுத்ததாக மீண்டும் ஒருமுறை கூறினார். "இரு அணுஆயுத நாடுகளும் மோதத் தயாராக இருந்தன, 11 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அந்தச் சமயத்தில் நான் தலையிட்டுப் போரை நிறுத்தினேன். இதன் மூலம் 3 கோடி முதல் 5 கோடி உயிர்களைக் காப்பாற்றியதற்காகப் பாகிஸ்தான் அமைச்சர் எனக்கு நன்றி தெரிவித்தார்," என்று அவர் குறிப்பிட்டார். இதற்காக நோபல் கமிட்டிக்கு பரிந்துரை கடிதங்கள் அனுப்பப்பட்டதாகவும் அவர் உரிமை கோரினார். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டையைத் தீர்க்க தான் வர்த்தக வரிகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தியதாக மீண்டும் டிரம்ப் விளக்கினார்.

Advertisement

ஹார்முஸ்

ஹார்முஸ் முற்றுகையில் ஈரான் பொருளாதாரம் சீர்குலைவு

ஈரான் விவகாரத்திலும், ஹார்முஸ் நீரிணையில் மேற்கொள்ளப்படும் கடற்படை முற்றுகை ஈரானின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்துள்ளதாகவும், கச்சா எண்ணெய் வருமானம் இல்லாததால் அவர்களின் பொருளாதாரம் பேரழிவைச் சந்தித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள போதிலும், அதனை ஒரு முழு அளவிலான போராக அறிவிக்க டிரம்ப் நிர்வாகம் மறுத்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உச்சத்தை எட்டியுள்ள போதிலும், கடற்படை முற்றுகை தொடரும் என டிரம்ப் உறுதிப்படத் தெரிவித்துள்ளார். ஈரானின் பிடிவாதம் இன்னும் எத்தனை காலம் நீடிக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று கூறிய அவர், அமெரிக்காவின் பொருளாதார மற்றும் ராணுவ அழுத்தம் ஈரானை விரைவில் ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தத்திற்கு இணங்க வைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement