பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை: இந்தியாவுக்கு எதிரான ஆதரங்களை சேகரிக்க கனடாவுக்கு உதவிய அமெரிக்கா
இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவுக்கு எதிரான குற்றம்சாட்டை நிரூபிக்க கனடாவுக்கு அமெரிக்கா உதவியது என்ற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்கு இந்தியா தான் காரணம் என்று அந்த கொலையுடன் இந்தியாவை இணைக்க அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் கனடாவுக்கு உதவியதாக கூறப்படுகிறது. அமெரிக்க உளவு அமைப்புகள் கனடாவுக்கு இது குறித்த தகவல்களை அளித்து, நிஜ்ஜாரின் கொலையுடன் இந்திய அரசாங்கத்தை இணைக்க அவர்களுக்கு உதவியது என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இதற்கிடையில், உளவுத்துறை தகவல் தொடர்புகளை இடைமறித்த கனட அதிகாரிகள் நிஜ்ஜாரின் மரணத்தில் இந்திய தூதர்களுக்கு தொடர்புள்ளது என்பதற்கான மறுக்கமுடியாத ஆதாரத்தை கைப்பற்றினர்.
இந்தியாவுடனான உறவை இழக்குமா அமெரிக்கா?
அமெரிக்காவின் உயர்மட்ட தலைவர்கள் கனடாவுடன் ஒத்துழைக்குமாறு இந்தியாவைக் கேட்டுக் கொண்ட போதிலும், பெரும்பான்மையான அமெரிக்க அதிகாரிகள் இந்த விஷயத்தில் இன்னும் மௌனம் காத்து வருகின்றனர். இந்த விஷயத்தில் கனடாவுக்கு அமெரிக்கா உதவியிருப்பதால், இந்தியா என்னும் மிக நெருக்கான நட்பு நாட்டுடனான உறவுகளை அமெரிக்கா இழக்கக்கூடும். ஆனால், நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவின் தலையீடு இருப்பது, கடைசியில் தான் அமெரிக்காவிற்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. ஹர்தீப் சிங் நிஜ்ஜாருக்கு எதிரான பெரிய சதி, அவரது மரணத்திற்குப் பிறகுதான் தெரியவந்தது என்று செய்திகள் கூறுகின்றன. அதனால், இந்த விஷயம் முதலிலேயே அமெரிக்காவிற்கு தெரியவந்திருந்தால், அமெரிக்கா "எச்சரிக்கும் கடமை" கோட்பாட்டின் கீழ் இந்தியாவிற்கு இது குறித்த தகவலை தெரிவித்திருக்கும்.