கனடா மீது 50% வரி! அமெரிக்கா-கனடா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை முற்றிலும் முறிந்தது
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா மற்றும் கனடா இடையே இறுதிக்கட்டத்தில் நடைபெற்று வந்த முக்கிய வர்த்தகப் பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் சனிக்கிழமை (ஆகஸ்ட் 22) அதிகாலை முற்றிலும் தோல்வியில் முடிவடைந்தது. இதன் காரணத்தால் கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்கள் மீது உடனடியாக 50 சதவீத இறக்குமதி வரியை அமெரிக்க நிர்வாகம் அதிரடியாக விதித்துள்ளது. அமெரிக்காவின் இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கைக்குப் பதிலடியாக கனடாவும் தகுந்த வரி விதிப்பு பதிலடிகளைத் தரும் என அறிவித்துள்ளது.
இறக்குமதி வரி
$20 பில்லியன் மதிப்புள்ள கனடா பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி
அமெரிக்க அரசு விதித்துள்ள இந்த புதிய 50 சதவீத வரி உயர்வானது, கனடா நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்யப்படும் மொத்தப் பொருட்களில் சுமார் 5 சதவீதத்தைப் பெருமளவில் பாதிக்கும்.
ஹாக்கி மட்டைகள் முதல் மருத்துவ உபகரணங்கள் வரையிலான பல அத்தியாவசியப் பொருட்கள் இதில் அடங்கும்.
பேச்சுவார்த்தையின் போது கனடா அரசு புதிய நிபந்தனைகளை முன்வைத்து முந்தைய வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்கியதே பேச்சுவார்த்தை முறிவிற்குக் காரணம் என அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் க்ரீர் குற்றம் சாட்டியுள்ளார்.
மார்க் கார்னி
அமெரிக்காவிற்கு டாலருக்கு டாலர் பதிலடி கொடுப்போம் என மார்க் கார்னி அறிவிப்பு
அமெரிக்காவின் இந்த அதிரடி வரி விதிப்புக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி, தங்கள் நாட்டுத் தொழிலாளர்களையும் வணிகங்களையும் பாதுகாக்க அமெரிக்காவிற்குத் டாலருக்கு டாலர் சம அளவில் வரி விதித்து உரிய பதிலடி கொடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
கடைசி நேரத்தில் அமெரிக்கா முன்வைத்த புதிய நிபந்தனைகள் நியாயமற்றவையாக இருந்ததால் தான் பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டுத் தங்களது பிரதிநிதிகளை ஒட்டாவாவிற்குத் திரும்ப அழைத்துள்ளதாக மார்க் கார்னி சுட்டிக்காட்டியுள்ளார்.
டொனால்ட் டிரம்ப்
1930 ஆம் ஆண்டின் பழமையான வர்த்தக சட்டத்தைப் பயன்படுத்திய டிரம்ப்
முன்னதாக டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகளை அமெரிக்க உச்சநீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, டிரம்ப் நிர்வாகம் தற்போது 1930 ஆம் ஆண்டின் ட்ரேட் ஆக்ட் செக்ஷன் 338 என்ற அரிதான பழமையான சட்டத்தைப் பயன்படுத்தியுள்ளது.
அமெரிக்க வணிகங்களுக்கு எதிராக செயல்படும் நாடுகள் மீது எவ்வித விசாரணையுமின்றி 50 சதவீதம் வரை வரி விதிக்க இந்த சட்டம் அதிபருக்கு முழு அதிகாரம் அளிக்கிறது.
இந்த சட்டம் உலகப் பொருளாதார பெருமந்தத்தை தீவிரப்படுத்திய வரலாற்றைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார சிக்கல்
வட அமெரிக்க வர்த்தகத்தில் உருவாகியுள்ள பெரும் பொருளாதாரச் சிக்கல்
அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையே ஆண்டுதோறும் சுமார் 880 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
கனடாவின் மொத்த ஏற்றுமதியில் 72 சதவீதம் அமெரிக்காவையே சார்ந்துள்ளது.
தற்போது இரு நாடுகளும் வரிகளை உயர்த்தி பகிரங்க மோதலில் ஈடுபட்டுள்ளதால், வட அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த வர்த்தகப் போர் இரு நாட்டு மக்களுக்கும் கடுமையான விலைவாசி உயர்வை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.