LOADING...
ஈரான் மீதான கடல் முற்றுகையை நீக்க டிரம்ப் உத்தரவு; நிம்மதிப் பெருமூச்சு விடும் உலக நாடுகள்
ஈரான் மீதான கடல்சார் ராணுவ முற்றுகையை அமெரிக்கப் படைகள் அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளன

ஈரான் மீதான கடல் முற்றுகையை நீக்க டிரம்ப் உத்தரவு; நிம்மதிப் பெருமூச்சு விடும் உலக நாடுகள்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 19, 2026
10:25 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த கடுமையான போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்ட ஆரம்பகட்ட அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரான் மீதான கடல்சார் ராணுவ முற்றுகையை அமெரிக்கப் படைகள் அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை குறித்து, அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உத்தரவு

அதிபர் டிரம்பின் நேரடி உத்தரவு

அதிபர் டொனால்ட் டிரம்பின் அறிவுறுத்தலின் பேரில், ஈரானை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்து வகையான முற்றுகை அமலாக்க நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக CENTCOM தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில்,"அதிபரின் உத்தரவுக்கு இணங்க, ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து வகையான கடல்சார் போக்குவரத்தின் மீதான முற்றுகையையும் அமெரிக்கப் படைகள் இன்று முதல் நீக்கியுள்ளன. அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடா வழியாக ஈரானிய துறைமுகங்களுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் கப்பல்களின் போக்குவரத்தை அமெரிக்கப் படைகள் இனி தடுத்து நிறுத்தாது" எனத்தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த அமைதி ஒப்பந்தத்தின் விதிகள் முழுமையாக பின்பற்றப்படுவதை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதிப்படுத்தவும் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் பிராந்தியத்தில் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டிருக்கும்.

பேச்சுவார்த்தை

60 நாட்கள் பேச்சுவார்த்தை மற்றும் சுவிட்சர்லாந்து கூட்டம்

இந்த வரலாற்று சிறப்புமிக்க திருப்புமுனை குறித்து பேசிய அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வென்ஸ், இரு தரப்பும் முதற்கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஒரு விரிவான மற்றும் நிரந்தரமான அமைதித் தீர்வை எட்டுவதற்காக இரு நாடுகளுக்கும் இடையே 60 நாட்கள் கால அவகாசத்துடன் கூடிய அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் சில குறிப்பிட்ட விவகாரங்களைக் கையாள்வதற்காக இரு தரப்பிற்கும் இடையே 'ஜென்டில்மேன் ஒப்பந்தங்கள்' எட்டப்பட்டுள்ளதாக ஜே.டி.வென்ஸ் குறிப்பிட்டுள்ளார். இதன் முதற்கட்டமாக, உலகளாவிய எரிசக்திப் போக்குவரத்திற்கு மிக முக்கியமான பாதையாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான தொழில்நுட்ப ரீதியான பேச்சுவார்த்தைகள் இந்த வார இறுதியில் தொடங்கவுள்ளன.

Advertisement

மாற்றங்கள்

உலக பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள்

அமெரிக்காவின் இந்த அதிரடி முடிவால் வணிகக் கப்பல்கள் இனி எவ்வித அச்சமுமின்றி ஈரானிய துறைமுகங்களை அணுக முடியும். போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த சர்வதேச எரிசக்தி மற்றும் கச்சா எண்ணெய் சந்தை இனி சீரடையும் என்பதால் உலக நாடுகள் நிம்மதி அடைந்துள்ளன. இருப்பினும், பிராந்தியத்தில் முழுமையான போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளை லெபனானில் தொடர்ந்து முன்னெடுத்து வருவதுடன், அங்கிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த நிலைப்பாடு தற்போதைய அமெரிக்க - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஏதேனும் சிக்கல்களை ஏற்படுத்துமா என்ற கவலையும் சர்வதேச அரசியல் நோக்கர்களிடையே எழுந்துள்ளது.

Advertisement