Loading...
அமெரிக்காவில் வேலை பார்க்க ₹85 லட்சமா? சர்வதேச மாணவர்களை அச்சுறுத்தும் OPT கட்டண திட்டம் குறித்து ஒரு பார்வை
OPT முறைக்கு $100,000 கட்டணம் விதிக்க டிரம்ப் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது

அமெரிக்காவில் வேலை பார்க்க ₹85 லட்சமா? சர்வதேச மாணவர்களை அச்சுறுத்தும் OPT கட்டண திட்டம் குறித்து ஒரு பார்வை

எழுதியவர் Venkatalakshmi V
Jul 31, 2026
11:08 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் பட்டப்படிப்பிற்கு பிறகு அங்கு தங்கி பணிபுரிய உதவும் 'ஆப்ஷனல் பிராக்டிகல் டிரெய்னிங்'(OPT) முறைக்கு $100,000 கட்டணம் விதிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஆலோசித்து வருவது சர்வதேச மாணவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. OPT என்பது ஒரு தனி விசா கிடையாது. F-1 மாணவர் விசாவில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயிலும் தகுதியுள்ள வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் படிப்பு தொடர்பான துறைகளில் தற்காலிகமாக பணிபுரிய வழங்கப்படும் ஓர் பணி அனுமதியாகும். பட்டப்படிப்பை முடித்த பிறகு 12 மாதங்கள் வரை மாணவர்கள் இதில் பணியாற்றலாம். STEM சார்ந்த படிப்புகளை முடிக்கும் மாணவர்களுக்குக் கூடுதலாக 24 மாதங்கள் நீட்டிப்பு வழங்கப்பட்டு, மொத்தம் 3 ஆண்டுகள் வரை பணிபுரிய அனுமதி அளிக்கப்படுகிறது.

பாதிப்பு

யார் அதிகம் பாதிக்கப்படுவார்கள்?

இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தால், அமெரிக்காவில் பட்டம் பெற்று OPT மூலம் பணியாற்றத் திட்டமிடும் சர்வதேச மாணவர்களே நேரடியாகப் பாதிக்கப்படுவர்.

குறிப்பாக, அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக அமையும்.

இந்திய மாணவர்களில் பெரும்பாலோர் STEM பாடப்பிரிவுகளை தேர்வு செய்வதால், அவர்களது நீண்டகாலப் பணித் திட்டங்கள் கேள்விக் குறியாகும்.

பல்கலைக்கழகக் கல்விக்கும் நீண்டகால H-1B போன்ற வேலைவாய்ப்பு விசாக்களுக்கும் இடையே பாலமாக OPT செயல்படுகிறது.

சர்வதேச மாணவர்கள் தங்கள் கல்விச் செலவின் ஒரு பகுதியை மீட்டெடுக்கவும், சர்வதேசப் பணி அனுபவத்தைப் பெறவும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

தற்போதைய நிலை

முன்மொழிவின் தற்போதைய நிலை

தி வால் ஸ்டிரீட் ஜர்னல் தகவலின்படி, விசா முறைகளை சீரமைக்கும் நோக்கில் $100,000 கட்டணம் விதிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், இத்திட்டம் இன்னும் விவாதக் கட்டத்திலேயே உள்ளது; அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

மேலும், இத்தொகையை மாணவர்களா அல்லது அவர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்களா செலுத்த வேண்டும் என்பதில் இன்னமும் தெளிவு வரவில்லை.

ADVERTISEMENT