LOADING...
இன்று ஈரானின் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது
"இன்று ஈரானின் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடக்கும்"

இன்று ஈரானின் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது

எழுதியவர் Venkatalakshmi V
Mar 19, 2026
06:37 pm

செய்தி முன்னோட்டம்

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா தனது இலக்குகளை எட்டும் வரை பின்வாங்காது என்று அந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். இதுவரை ஈரானில் 7,000-க்கும் மேற்பட்ட இலக்குகளை அமெரிக்கப் படைகள் அழித்துள்ள நிலையில், வியாழனன்று மிகப்பெரிய அளவிலான "ஸ்ட்ரைக் பேக்கேஜ்" தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அவர் உறுதிபடக் கூறினார். அமெரிக்காவின் இந்த ராணுவ நடவடிக்கையின் நோக்கம் தெளிவானது என்று குறிப்பிட்ட ஹெக்செத், ஈரானின் ஏவுகணை தளங்களை அழிப்பது, பாதுகாப்பு தொழில் கட்டமைப்பை சிதைப்பது, அந்நாட்டின் கடற்படையை முடக்குவது மற்றும் ஈரான் அணு ஆயுதத்தைப் பெறுவதைத் தடுப்பதே முதன்மை இலக்குகள் என்றார். தற்போது ஈரானின் வான்பாதுகாப்பு மண்டலங்கள் "தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக" அவர் சுட்டிக்காட்டினார்.

பாதிப்புகள்

"ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் திறன் 90% சரிவு"

ஈரானின் 120 போர்க்கப்பல்கள் மற்றும் 11 நீர்மூழ்கிக் கப்பல்கள் அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், ஈரானின் ஏவுகணை தாக்குதல் திறன் 90% சரிந்துள்ளதாக கூறினார். மேலும், மூத்த ஈரானிய ராணுவத் தளபதிகளின் பதவிகளை "தற்காலிக வேலைகள்" என்று விமர்சித்த அவர், ஈரானிய ராணுவ தலைமை கடும் அச்சத்தில் இருப்பதை மறைமுகமாக சுட்டினார். இந்தப் போர் நீண்ட காலம் நீடிக்கும் என்ற ஊடகங்களின் விமர்சனத்தை நிராகரித்த ஹெக்செத், வீரர்களின் தியாகத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் இந்தப் பணி முழுமையாக முடிக்கப்படும் என்றார். ஈரானின் அணு ஆயுதக் கனவு உலக நாகரிகத்திற்கே அச்சுறுத்தல் என்றும், அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தலைமையின் கீழ் அமெரிக்கா இப்பிரச்சினையை அதன் நிபந்தனைகளின்படி முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.

Advertisement