அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக கைது வாரண்ட்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது 18 கூட்டாளிகளுக்கு எதிராக திங்கள்கிழமை இரவு(உள்ளூர் நேரப்படி) கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அவர்கள் தானாக முன்வந்து சரணடைய வெள்ளிக்கிழமை மதியம் 12:00 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததை மாற்றியமைக்க முயன்றது தொடர்பாக 13 குற்றசாட்டுகள் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சுமத்தப்பட்டது. இதற்கான விசாரணை இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது டிரம்புக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்படும் நான்காவது குற்றச்சாட்டு இதுவாகும். இதற்கிடையில், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்திலும் அவர் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்புக்கு எதிராக 97 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை
டிரம்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 97 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் அவர் தேர்தல் மோசடி செய்ததாகவும், போலி ஆவணங்களை சமர்பித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. டிரம்ப் மற்றும் அவரது உதவியாளர்கள் ஜார்ஜியாவில் உள்ள ஒரு மாகாணத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து தரவுகளை திருடியதாக கூறப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெற, டிரம்ப் மற்றும் அவரது கூட்டாளிகள் ஜார்ஜியா குடியரசுக் கட்சியின் மாநிலச் செயலாளருக்கு அழுத்தம் கொடுத்து, வாக்காளர் மோசடி செய்ய முயன்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையின் முன்னாள் தலைமை அதிகாரி மார்க் மெடோஸ் மற்றும் டிரம்பின் தனிப்பட்ட வழக்கறிஞர் ரூடி கியுலியானி ஆகியோரும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களில் அடங்குவர்.